பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

ekuruvi-aiya8-X3

vaigai_10மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 28-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 26-ந் தேதி விழா ஆரம்பமானது.
மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 5-ந் தேதி பட்டாபிஷேகமும், 6-ந்தேதி திக் விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது. இந்த நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (8-ந் தேதி) இரவு 7 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். நேற்று மாலை தல்லாகுளம் பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபோகம் இன்று நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி, அலங்காரம் செய்யப்பட்ட கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளினார். இன்று காலை 6.30 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினால் அந்த வருடம் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Share This Post

Post Comment