போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சாலி கல்லகேக்கு அவுஸ்திரேலிய நுழைவு விசா மறுப்பு!

Major-General-Chagi-Gallageவன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறிலங்கா இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு அவுஸ்திரேலிய நுழைவு விசா வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.

அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காகவே, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால அஸ்ரேலிய நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இருப்பினும், இறுதி யுத்தம் நடைபெற்ற 2009 மே 07ஆம் நாள் தொடக்கம், 2009 ஜூலை 20 ஆம் நாள் வரை மேஜர் ஜெனரல் சாலி கல்லகே சிறிலங்கா இராணுவத்தின் 59ஆவது பிரிகேட்டுக்குத் தலைமைதாங்கியிருந்தார் என்பதாலேயே அவருக்கான நுழைவு விசா விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

தனது தலைமையின்கீழ் சிறிலங்கா இராணுவம் நிச்சயமாக போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்துள்ளனர் என்று அவுஸ்ரேலிய தூதுரகம் தெரிவித்ததாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்காவில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்த, 2011 மார்ச் 31ஆம் நாள் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையையும் அவுஸ்ரேலியா மேற்கோள்காட்டியிருக்கிறது.

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினர், ஆளில்லா வேவு விமானங்களின் மூலம் திரட்டிய நிகழ்நேரப் படங்கள் மூலம், களமுனைத் தளபதிகள் இலக்குகளைத் தீர்மானித்தனர் என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருந்த கருத்தை மேற்கொள்காட்டிய அவுஸ்ரேலியா, மூன்றாவது போர்தவிர்ப்பு வலயம் மீது ஆட்டிலறி தாக்குதலை நடத்துகிறோம் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அறிந்திருந்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் கல்லகே, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தி, ஆதரவளித்தார் என்று அவுஸ்ரேலியா குற்றம்சாட்டியிருக்கிறது.

தமது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கத் தவறி விட்டார் என்றும் அவுஸ்ரேலியா குற்றம்சாட்டியுள்ளது.

மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக அவுஸ்ரேலியா போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதானது, தமிழ் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை அவுஸ்ரேலியா நம்புகிறது என்பதை வெளிப்படுத்துவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment