அரசியல் கைதிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர்!

ekuruvi-aiya8-X3

cv-2பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசியல் கைதிகளின் உறவினர்களினால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் நூறிற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்களின் சிறைமாற்றம் மற்றும் மருத்துவம் உட்பட அத்தியவசிய தேவைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவுக்கு அரசியல் கைதிகளின் உறவினர்கள மகஜர் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பேரவைச் செயலகத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையடினர். குறித்த மகஜரின் பிரதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் பாரிய குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், போதைவஸ்து பாவனை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க படுகொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சகோதரனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லையென அவரது சகோதரன் சதாசிவம் சாந்தநேசன் தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் கைதிகள் அனைவரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதியின் தாய் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட பல அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட மு.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.

Share This Post

Post Comment