அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டிக்கவே அரசு முயற்சி! – அருட்தந்தை சக்திவேல்

ekuruvi-aiya8-X3

sakthivelஅரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு நீண்டகாலம் தண்டனை அனுபவித்து வருவதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். உண்ணாவிரதம் இருந்தால்தான் தமது விடுதலை விடயத்தில் முன்னேற்றமொன்றைக் காணமுடியும் என்ற நிலைக்கு அரசியல் கைதிகள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

14 தமிழ் அரசியல் கைதிக‍ள் 15 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதத்தை இவர்கள் கைவிட்டனர். கடந்த காலத்திலும் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டபோதே பிணை வழங்குவது, புனர்வாழ்வு வழங்குவது என்ற உறுதிமொழிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. உண்ணாவிரதம் இருந்தாலே கைதிகளின் விடயத்தில் முன்னேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

உண்ணாவிரதம் மேற்கொண்டதாலேயே அவசர அவசரமாக 14 பேருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக சட்டமா திணைக்களம் அறிவித்தது. எனினும் புனர்வாழ்வு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. உண்ணாவிரதமிருந்த கைதிகளை தமிழ் அரசியல்வாதிகள் எவரும் நேரில் சென்று பார்க்கவில்லை. அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி கைதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவர்களால் நிறைவேற்ற முடியாது போனதால் கைதிகளின் முகத்தைப் பார்க்கமுடியாதுள்ளது. அதனாலேயே தமிழ் அரசியல்வாதிகள் சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்வையிடவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களமும், அரசாங்கமும் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவதிலேயே குறியாக உள்ளது. இதனாலேயே சட்டமா அதிபர் திணைக்களம் காலத்தை இழுத்தடிக்கிறது. அதேநேரம் அரசாங்கம் தனது அரசியலுக்காக கைதிகளை குற்றவாளிகளாக வைத்திருக்கப் பார்க்கிறது. மறு பக்கத்தில் மஹிந்தவும் அவருடைய ஆதரவாளர்களும் கைதிகளை வைத்து அரசியல் நடத்தப் பார்க்கின்றனர். யாராவது ஒருவரின் அரசியலுக்காக சிறு எண்ணிக்கையைக் கொண்ட கைதிகள் நீண்டகாலமாக சிறைகளில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

பலர் போதுமானளவு காலம் சிறையில் கழித்துவிட்டனர். சிறைச்சாலைகளும் புனர்வாழ்வு நிலையங்கள் தான் என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனக் கூறிய அவர், மீண்டும் புனர்வாழ்வுக்கு அனுப்பி காலத்தை இழுத்தடிக்காமல் கைதிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Share This Post

Post Comment