இந்திய உதவியுடன் காய்நகர்த்துகிறார் விக்னேஸ்வரன்! – சினம் கொள்ளும் சிங்கள ஊடகம்

ekuruvi-aiya8-X3

Wickiவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அரசாங்கத்தைப் புறம் தள்ளி இந்திய மத்திய அரசுடன் நேரடி உறவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மாகாணசபை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அடித்தளமிட்டது 13ஆவது திருத்தச் சட்டமாகும். அத்துடன், 13ஆவது திருத்த சட்டம் இந்திய தலையீட்டின் மூலம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதே வழியில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றுக்கும் இந்திய தலையீட்டைப் பெற்றுக் கொள்வது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நோக்கமாகும். வடமாகாண முதலமைச்சராக பதவியேற்றது முதல் ஒரே இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் நாட்டமில்லாதவராக சி.வி.விக்னேஸ்வரன் இருக்கிறார். எவ்வாறாயினும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை வழங்க முற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் தீவிரமாக எதிர்த்தார். அதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை சி.வி.விக்னேஸ்வரன் திருப்திப்படுத்த முயற்சித்தார்.

இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவர் வடக்கிற்கான விஜயங்களை மேற்கொண்ட போது விக்னேஸ்வரன் ஒருபோதும் அவரை வரவேற்றதில்லை. இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்குச் செல்லும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் முதலமைச்சர் தவறாமல் ஆஜராகி வரவேற்றுள்ளார். அந்த வகையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஏதோ ஒரு தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதன் காரணமாகவே அவருக்கு இந்த வரவேற்பு கிட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் அந்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment