லிபியா அகதிகள் படகு கடலில் மூழ்கி – 13 பேர் சடலங்கள் மீட்பு

sdsd

Rescuers-find-13-bodies-in-crowded-miலிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.

மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், லிபியா எல்லை அருகே அகதிகள் பயணம் செய்த சிறிய படகு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து இத்தாலி நாட்டைச் சேர்ந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலியான 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 167 பேர் விபத்துக்குள்ளான படகில் பயணம் செய்துள்ளனர். அதிகப்படியான நபர்கள் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 2,370 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share This Post

Post Comment