8 வயது சிறுமி கற்பழித்து கொலை தூக்கிலிடுங்கள் மனித நேயம் செத்து விட்டது- பிரபலங்கள்

Facebook Cover V02

JusticeForAshifaஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனார். காணாமல் போய் ஒருவாரத்திற்குப்பிறகு ரச்சன்ன வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. ஆசிபா ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடத்தி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. இத்தகைய குற்றம் புரிந்த குற்றவாளிகளை எப்படி யாரும் பாதுகாக்க முயல முடியும் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே எதிரானவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தகைய குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று வேதனை குரலை பதிவு செய்துள்ளார் மத்திய அமைச்சர் விகே சிங். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நிச்சயம் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்தபேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றதற்கு மெகபூபா எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று எதிர்க்கட்சித்தலைவரான தேசிய மாநாட்டுக்கட்சித்தலைவர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்க கதுவா வழக்கறிஞகள் முயன்ற சம்பவம் கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
 பாவம் குழந்தை! அவரை கொடுமைப்படுத்தி கொலை செய்தவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது. அந்த கயவர்களை தூக்கில் போடுங்கள். எப்படி ஒருவரால் இப்படி மனிதத்தன்மை இல்லாமல் இருக்க முடியும். #JusticeforAsifa என டுவிட் போட்டுள்ளார் ஹன்சிகா.
இது மனிதத்தன்மையற்ற செயல், இப்படி ஒரு சமூகம் இருப்பதை நினைத்தாலே கொடுமையாக உள்ளது என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது மனிதத்தன்மையற்ற செயல், உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற கொடூரன்களுக்கு எந்த தண்டனையும் கடினமாக இருக்குமா என்று வியக்கிறேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங். 8 வயது சிறுமியை பட்டினிபோட்டு, போதைப் பொருள் கொடுத்து, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இது நடந்தது என்றே நம்ப முடியவில்லை. அந்த சிறுமி இந்த கொடுமையை எல்லாம் எதிர்கொண்டுள்ளார் என்கிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.

என் இதயம் நொறுங்கிவிட்டது, மனிதநேயம் செத்துப் போய்விட்டது என்று குமுறியுள்ளார் சுஜா வருணி.

ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த சிறுமி ஆசிபாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார் , எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நீதிக்காக போராடுவேன் என கூறி உள்ளார்.

Share This Post

Post Comment