ஜெயலலிதா மறைவுக்கு பாராளுமன்றம் இரங்கல்

ekuruvi-aiya8-X3

Parlimentபாராளுமன்றம் நேற்று கூடியவுடன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுச்செய்தியை அறிவித்து, இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் மறைவால், நாடு மிகவும் புகழ்வாய்ந்த, சிறப்புவாய்ந்த ஆளுமைமிக்க தலைவரை இழந்து விட்டது. அவர் உண்மையான மக்கள் தலைவராக திகழ்ந்தார். தாய் என்று பொருள்படத்தக்க விதத்தில் அவரை அனைவரும் அம்மா என்றும், புரட்சித்தலைவி என்றும் அன்புடன் அழைத்தார்கள்.

‘அவர் 6 முறை தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர் பதவியை அலங்கரித்திருக்கிறார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித்தலைவர் என்ற பெருமையும், மேல்–சபையின் உறுப்பினராகவும் 1984–ம் ஆண்டு முதல் 1989–ம் ஆண்டுவரை அவர் பதவி வகித்திருக்கிறார்.

ஜெயலலிதா பன்முகம் கொண்ட தலைவர். சிறந்த நடனக்கலைஞர். முழுநிறைவான நடிகை. 140–க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி சினிமா படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். அதைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயலலிதா உறுப்பினர் பதவி வகித்து, தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய டெல்லி மேல்–சபையிலும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அந்த சபையில் ஜெயலலிதாவின் மறைவுச்செய்தியை சபைத்தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் மறைவால் நாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தலைவரை, சிறப்புவாய்ந்த பாராளுமன்றவாதியை, திறமையான நிர்வாகியை இழந்து விட்டது.

ஜெயலலிதா அனைவரையும் கவர்ந்திழுத்த ஆளுமை மிக்க தலைவர். அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூகத்தின் நலிவு அடைந்த பிரிவினருக்கும் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அதைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Share This Post

Post Comment