ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி! வைரமுத்து வாழ்த்துக் கவிதை

vairamuthuஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மாணவர்களுக்கு வைரமுத்து வாழ்த்துக் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தமி்ழக அரசு சட்டப்பேரவையில் அவசர சட்டம் ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

மாணவர்கள் போராட்டம் வெற்றியடைந்ததை முன்னிட்டு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கவிதை இதோ:

வாடிவாசல் திறந்துவிடும்
வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
சூளுரைத்த பாட்டு – கடல்
உள்வாங்கிப் போனதடா
உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
ஆராய வேண்டும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*