ஜல்லிக்கட்டு நடக்குமா? சாதகமான முடிவு ஏற்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை

jallikattu_rushஜல்லிக்கட்டுக்கு உலக அளவில் பெயர் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் கடந்த 16–ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. உள்ளூர் மக்கள், பக்கத்து கிராம மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அடங்கிய போராட்டக் குழுவினர் கலைந்து செல்லாமல் இரவில், கொட்டும் பனியில் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் போராட்டத்தை தொடருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இளைஞர்களும், மாணவர்களும் நடத்தும் எழுச்சி போராட்டத்தால் தமிழகமே குலுங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வியாபாரிகள் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடிகர்–நடிகைகள் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த போராட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு உள்ளது. முன்னணி நடிகர்–நடிகைகள் அமர்வதற்கு மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தமிழர்களின் கலாசார உரிமையை மீட்டெடுக்க உணர்வுப் பூர்வமாக நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்–நடிகைகளும் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனை ஏற்று முன்னணி நடிகர்–நடிகைகள் அனைவரும் இதில் கலந்துகொள்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள். நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் திரைப்பட கூட்டமைப்பு சார்பில் நேற்று ரத்து செய்யப்பட்டு இருந்தன. நடிகர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜல்லிக்கட்டை காப்பாற்றியாக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ–மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நாளை(இன்று) தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடைகளை அடைப்பது என்று வணிகர் பேரவை முடிவு எடுத்திருக்கிறது.

கடைகளை அடைப்பதுடன் தங்கள் பகுதியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை வியாபாரிகள் நடத்துவார்கள். நல்ல குடிநீர் கிடைக்காமல், கொசுக்கடி, சுற்றுச்சூழல் கேடு என்று நாளும் வதைப்படும் மக்களை பற்றி கவலைப்படாமல் மிருகங்களுக்காக வாதாடுவதாக சொல்லி தேவையற்ற விதத்திலும், அன்னிய ஆதிக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வணிகர் பேரவை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள்–இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கிறது. இப்பிரச்சினையில் மத்திய அரசு தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உடனடியாக சட்டப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இன்று (நேற்று) மாலைக்குள் மத்திய அரசு சட்டபூர்வமான முடிவை அறிவிக்கவில்லை என்றால், மாணவர்கள்–இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழக வணிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் 20–ந்தேதி (இன்று) தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 20–ந் தேதி (இன்று) 4,500 வியாபாரிகள் சங்கங்களும், 10 லட்சம் வணிகர்களும் கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்று கூறினார்.

Share This Post

Post Comment