அவனியாபுரத்தில் 14-ம் தேதி ஜல்லிக்கட்டு

ekuruvi-aiya8-X3

jalikattuபிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16-ம் தேதி நடக்கிறது. முன்னதாக 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு வழக்கம்போல் நடத்தப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்ட முடிவில், கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவனியாபுரத்தில் வருகிற 14-ந் தேதியும், 15-ந் தேதி பாலமேட்டிலும், 16-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

10 ஆம்புலன்சுகள், 3 தீயணைப்பு வாகனங்கள், 10 மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள். 300 முதல் 500 காளைகள் வரை பங்கேற்கக் கூடும். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காளைகள் கால்நடை பராமரிப்புத்துறையின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனவா, போதைப்பொருள், எரிச்சலூட்டும் பொருட்கள், ஊக்க மருந்து ஆகியவை பயன்படுத்தப்பட்டனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அனைத்து காளைகளுக்கும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தகுதிச்சான்று பெற்றிட உரிமையாளர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். தொழுவத்தில் இருந்து வாடிவாசலுக்கு கட்டவிழ்த்துவிட கொண்டுவரப்படும் காளைகளுக்கு முன்னரே மூக்கு கயிறுகள் அவிழ்த்திருக்கப்பட வேண்டும்.

காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது எதிரில் மாடுபிடி வீரர்கள் நிற்க அனுமதிக்கக்கூடாது. மாடுபிடி வீரர்கள் காளைகளின் வால் பகுதியையோ, கொம்புகளையோ பிடிக்கக்கூடாது. மேலும் காளைகளின் ஓட்டத்தை தடை செய்யும் நோக்கில் காளைகளின் கால்களை பற்றிடக்கூடாது. மேற்படி விதிமுறைகளை பின்பற்றாத வீரர்கள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.

Share This Post

Post Comment