ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் அத்துமீறலா? விசாரணை நடத்தப்படும் –

ekuruvi-aiya8-X3

OPSசென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட போராட்டம் பிரமாண்டமான அளவில் நடைபெற்றது.
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது.
அப்போது திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியிலும், சென்னை நகரின் வேறு சில இடங்களிலும் தீவைப்பு, கல்வீச்சு போன்ற பயங்கர வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். இந்த சம்பவத்தில் ஏராளமான போராட்டக்காரர்களும், போலீசாரும் காயம் அடைந்தனர்.
 
இது தொடர்பாக சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.
அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-
சென்னை மாநகரில் ஆங்காங்கு சட்டவிரோத கும்பல்கள் பொதுசொத்துக் களுக்கு சேதம் விளைவித்தும், போலீசாரை தாக்கியும், காவல் வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட போது காவல்துறையினர் தலையிட்டு அவர்களை கலைந்து போக அறிவுறுத்தியும், கலைந்து செல்ல மறுத்து வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டவர்களை வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்த பட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் கலைத்தனர்.
 
சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பொது இடங்களில் சாலை மறியல், ரெயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை நீங்கலாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் 27 காவல்துறை அதிகாரிகளும், 4 அரசு பேருந்து பணியாளர்களும், 19 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், 7 காவல் வாகனங்கள், அரசு பேருந்துகள் உட்பட 50 அரசு வாகனங்கள், 2 தனியார் வாகனங்கள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மெரினா கடற்கரையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 250 நபர்களிடமும் 24.1.2017 அன்று காலை, காவல் துறையினர் அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டதன் பேரில், அவர்கள் சிறிது சிறிதாக கலைந்து அன்று மாலை அனைவரும் கலைந்து சென்றனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல விடாமல் அமைதியான போராட்டத்தை திசை திருப்பி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராகவும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பல இடங்களில் தேசவிரோத, சமூக விரோத, பயங்கரவாத சக்திகள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்கள் காவல் துறையினரை தாக்கியும், காவல் நிலையங்கள், காவல் வாகனங்களுக்கு தீவைத்தும், சேதம் விளைவித்தும், பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய போதும் காவல் துறையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் துப்பாக்கிச்சூடு, தடியடி போன்ற பலப்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடாமல் குறைந்தபட்ச பலத்தை மட்டுமே உபயோகித்து பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் சேதம் ஏற்படாமல் அச்சக்திகளை கலைத்து சட்டம்- ஒழுங்கை பராமரித்தனர் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
 
சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது, சட்டவிரோதமாக செயல்பட்ட சமூகவிரோத கும்பல்களை கலைக்கும் போது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இது தொடர்பாக சில காணொளி பதிவுகள் பல்வேறு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டுகள் உண்மை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment