இதுவும் ஓர் கண்துடைப்பே! – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”

விடுதலையின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்டு தற்போது தனிநபர் (அசையும் மற்றும் அசையாத) சொத்துக்களாக உள்ள பணம் அறக்கட்டளை ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு தாயகத்தில் யுத்தத்தினால் இன்றும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்காக செலவு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதா?”tamil-canadian

கடந்த வருடம் நவம்பர் மாத 2014 இகுருவி பதிப்பிற்காக  விடுதலையின் பெயரால் சூறையாடப்படும் நிதி – தலைவர் வரும்போது திரும்பிக் கொடுப்போம்” என்ற தலைப்பில் என்னால் எழுதப்பட்ட கட்டுரையில் முன்வைக்கப்பட்ட ஆதங்கம் இது.

இந்த கட்டுரை வெளியாகி மாதங்கள் பல கடந்த நிலையில் கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையம் – Canadian Tamil Social And Economic Foundation (CTSAEF) உருவாக்கப்படுவதான  செய்தி வெளியானது. இந்த தர்ம நிலையம் குறித்து மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு ஒன்று இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தின்  இறுதியில் Scarborough  நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. காலம் கடந்த நகர்வாக இருந்தாலும் கொஞ்சம் மிஞ்சியிருந்த நம்பிக்கையுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கும் மீண்டும் கிட்டியது ஏமாற்றமே.

கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையம் என்ற அமைப்பின் உருவாக்கம் ஊடாக கனடாவில் பொதுமக்கள் பணத்தில் இயங்கிவரும் நிறுவனங்கள் ஒன்றாக ”அறக்கட்டளை” ஒன்றின் கீழ் இணையும் என்ற தொனியில் பத்திரிகையாளர் மாநாடொன்றிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதியில் அங்கு நடைபெற்றது பத்திரிகையாளர் மாநாடா அல்லது மக்கள் சந்திப்பா என்ற குழப்பத்தின் மத்தியில் அந்த நிகழ்வு முடித்து வைக்கப்பட்டது.

ithuvum-ulakaகனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தில் இணைவதாக ஆறு நிறுவனங்களில் பெயர்கள் அன்று அறிவிக்கப்பட்டன. கனடாத் தமிழ்க் கல்லுாரி (Academy), அறிவகம் கனடா, கனடிய தமிழர் விளையாட்டுத்துறை (விளையாட்டுப் பிரிவு), தமிழர் வணிகம் (வர்த்தகக் கைநுால்), கனடா உலகத்தமிழர் (பத்திரிகை), கனடிய தமிழ் வானொலி (CTR) ஆகியவையே இந்த இணைப்பில் உள்ளடக்கப்பட்ட நிறுவனங்களாகும். இவற்றுள் CTR வானொலி உடனடியாக இணைத்துக் கொள்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் இந்தச் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆறு நிறுவனங்களில் நடத்துனர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அல்லது அவ்வாறு கலந்து கொண்டிருந்தால் அவர்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த நிகழ்வில் கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தின் உறுப்பினர்களாக ஏழு பேர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த ஏழு பேரும் யாரால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களை இணைத்தது யார். அல்லது இவர்கள் எவ்வாறு தங்களை இவ்வாறானதொரு நகர்வில் இணைத்துக் கொண்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த மக்கள் சந்திப்பை தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் கனடாக் கிளையின் முன்னாள் தலைவர் குணநாதன் மற்றும் தமிழ் கலை தொழில் நுட்பக் கல்லூரியின் தலைவர் துரைராசா ஆகியோர் முன் நின்று நடத்தினார்கள். இவர்கள் இருவருக்கும் கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திற்குமான தொடர்பு என்ன என்ற கேள்வி முன்வைப்பதற்கான சந்தர்ப்பமே வழங்கப்படவில்லை.

ekuruvi-laசபையில் கூடியிருந்த பொதுமக்களில் பலரும் முன்வைத்த அடிப்படைக் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.  இந்த சந்திப்பு முடிவடைய முன்னரே கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திற்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் இது தொடர்பாக தம்மிடம் தொடர்ந்து எந்த கேள்விகளையும் முன்வைக்க வேண்டாம் எனவும் அவர்கள் இருவரும் நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தில் கூறியது ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

அவர்கள் இருவரது நிலைப்பாடு இதுவாயின் இந்த மக்கள் சந்திப்பில் அவர்கள் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். சந்திப்பில் கலந்‌துகொண்டு, அதில் உரையாற்றி, கலந்து கொண்டவர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளில் பலவற்றுக்கும் பதில் அளிக்க முனைந்த பின்னர் கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திற்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்பது என்ன வகையில் நியாயமாகும் என்ற கேள்வி முன்வைக்கப்பட‌ வேண்டியது.

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு பலமாக இயங்கிய காலத்தில் பொதுமக்களிடம் சேகரிக்thipan-raj-aகப்பட்ட பணத்தில் தனியார் பெயர்களிலும் குழுக்களாகவும் பல முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், ஊடகங்கள், கட்டிடங்கள், ஆலயங்கள் உட்பட பலவும் அடங்கும். கனடாவிலும் (ஏனைய புலம்பெயர் நாடுகளிலும்) விடுதலைப் புலிகளின் பெயரால் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் எவை என்பதும் அந்தக் சொத்துக்கள் யார் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டன என்பதும் அந்தந்த நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினையும் அதன் துணை மற்றும் கிளை அமைப்புக்களையும் வழி நடத்தியவர்கள் அறிந்த விடயமே. அவர்கள் தாங்கள் அறிந்த விடயங்களை முழுமையாக வெளியிடுவது ஒரு ஆரம்பப் புள்ளியாகும். இதுபோன்ற தகவல்களை அறிந்த பலர் இன்றும் நம்மவர் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

தகவல் அறிந்தவர்கள் அவற்றை வெளியிட தவறும்(அல்லது மறுக்கும்) நிலையில் கனடாவின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை(Access to Information Act) துணைக்கு அழைக்க வேண்டியதே  வழிமுறையாக ஊடகங்களுக்கு இருக்கும். தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் கனடாவில் விடுதலைப் புலிகளினால் (அல்லது அவர்களது துணை மற்றும் கிளை அமைப்புக்களினால்) நிர்வாகிக்கப்பட்ட வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், ஊடகங்கள், கட்டிடங்கள், ஆலயங்கள் உட்பட்ட விபரங்களும் அவை யார் பெயரில் இயங்கின என்ற விபரங்களில் சிலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியம்.

இது தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பையும் கனடாவில் அதன் செயற்பாட்டு அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தையும் தடைசெய்தபோது RCMP மேற்கொண்ட விசாரணையின் விபரங்களை பெறுவது வேறு பல தகவல்கள் மீது வெளிச்சம் பாச்சும் மற்றுமொரு வழிமுறையாக இருக்கும். இந்த விசாரணை அறிக்கை ஊடாக கனடாவில் விடுதலைப் புலிகளினால் (அல்லது அவர்களது துணை மற்றும் கிளை அமைப்புக்களினால்) நிர்வாகிக்கப்பட்ட வியாபார நிறுவனங்கள், உணவகங்கள். ஊடகங்கள். கட்டிடங்கள். ஆலயங்கள் உட்பட்டவை யார் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன((பொதுமக்கள் பணத்தின் முதலீடாக) என்ற கேள்விக்கான பதிலை அறிய முடியும். இந்த இரண்டு நகர்வுகளிலும் முழுமையான தகவல்களும் வெளிவராது என்றபோதிலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

கறுப்புப் பணம் எல்லாம்‌ வெள்ளையாக்கப்படும் பல நகர்வுகள் அண்மையில் அரங்கேறுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே அண்மையில் உருப்பெற்ற கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தையும் நோக்கத் தோன்றுகின்றது. இந்த தர்ம நிலையத்தை நியாயப்படுத்துவதற்காக நிதிநிலையில் சவால்களை எதிர்கொள்ளும் அல்லது கடுமையான இயங்கு நிலையில் உள்ள ஆறு நிறுவனங்கள் மக்கள் முன்னால் அடையாளம் காணப்பட்டு அவை மாத்திரமே பொதுச் சொத்து என்ற கண்துடைப்பு கண்முன்னே அரங்கேறுகின்றது.

கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் இயங்குபவர்கள் யார் என்ற கேள்விக்கே வெளிப்படையாக பதில் தர மறுக்கும் (அல்லாவிடில் பதில் தர தடுக்கப்படும்) கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையம் இன்னும் எழும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும் எப்படி பதில் கூறப்போகின்றது?

நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் அதன் பின்னர் நடைபெற்ற “காற்றுவெளி” வானொலி நிகழ்ச்சியிலும் கலந்துரையாடலிலும் முன்வைக்கப்பட்டு பதில் கிடைக்காத கேள்விகள் பல. அவற்றில் ஜந்து கேள்விகளை மாத்திரம் முன்வைக்க விரும்புகின்றேன்

1) கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் இயங்குபவர்கள் யார்?

2) கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தில் இணைந்து முன்வந்துள்ள ஆறு நிறுவனங்களின் இன்றைய நிதி நிலை என்ன?

3) கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர மக்கள் பணத்தில் முதலீடு செய்யப்பட்ட வியாபார நிறுவனங்களின் (இவற்றில் ஊடகங்கள் மற்றும் ஆலயங்களும் அடங்கும்) நிலை என்ன?

biztha_photo_ekuruvi_images4) தனியார் சொத்தாக ”நம்பிக்கையின் அடிப்படையில்” தனிநபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் நிலை என்ன?

5) 2009ஆம் ஆண்டு‌ மே மாதம் வரை மக்களிடம் பல்வேறு வகைகளிலும் விடுதலையின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?

இந்த ஜந்து அடிப்படைக் கேள்விகளுக்கு கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையம் பதில் வழங்கினால் மிகுதி தொடரும் ……. வழங்காவிட்டால், இதுவும் ஒரு கண்துடைப்பே

இகுருவிக்காக இலங்கதாஸ் பத்மநாதன்

 


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *