” அதற்கு இவர்கள் தேவையில்லை அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை” எஸ் ஆர்

போர் நடக்கலாம். பலர் கொல்லப்படலாம். எனினும் இறுதியில் பேச்சுவார்த்தை

ஒன்றின் மூலமே பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும் – தென்னாபிரிக்காவின்

தேசிய தலைவர் நெல்சன் மண்டேலா
இலங்கையில் கடந்த பல தசாப்பதங்களாக தொடரும் இன முரண்பாட்டிற்கான தீர்வும் இதன் அடிப்படையில் ஏற்படும் என்று பலர் நம்புகின்றார்கள்.

ஆனால் தென்னாபிரிக்காவில் நிற வெறிக் கொள்கை கொண்ட 10 தலைவர்கள்
நீக்கப்பட்டமையை அடுத்தே அங்கு சமாதானம் நிலை பெற்றது.அது போன்ற
நிலை இலங்கையில் ஏற்பட வேண்டுமானால் இலங்கை அரசியல் அரசங்கில் இருந்து நூற்றுக் கணக்கானவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் என்பதை பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை காலம் எமக்கு வழங்கவில்லை.

முரண்பட்டு நிற்கின்ற இனங்களிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான சந்தேகங்கள் நீக்கப்படவேண்டும் என்று தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய போராளிகளில் ஒருவரான ஐவர் எச்.ஜென்கின்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கும் முன்பாக தமிழ் சமூகம் ஒன்றுபட்ட குரலில் தமக்கான தீர்வு என்ன என்பதை முன்வைப்பதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டியிருப்பதே எமக்கு முன்பாக உள்ள மிகப் பெரிய சவாலகும்.

சிங்கள தலைமைகளையும் சர்வதேசத்தையும் இந்தியாவையும் தென்னாபிரிக்காவையும் அமெரிக்காவையும் அனுசரித்து பெறுகின்ற தீர்வே பொருத்தமானது என்கின்ற ”மித” வாதத்தை கொண்டுள்ள தலைமையை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக இலங்கை அரசியில் அரங்கில் தெரிவு செய்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் .இணங்கிப் போகும் அரசியல் தெரிவினை மேற்கொள்வதன் மூலம் புலம் பெயர் தமிழர் தரப்பாக தங்களை அடையாளப்படுத்த ”முன்னாள்” தேசிய விசுவாசிகளும் இன்னாள்
அரசியல் ”புனிதர்களாக ” தம்மை முன்னிலைப்புடுத்தும் தமிழர் அமைப்புகளும் முன்வந்துள்ளன.

இதற்கு வெளியில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு சார்பாக அல்லது அதே கருத்தியலை கொண்டுள்ள தாயக அரசியல் தரப்பாக கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விளங்குகின்றது.

இந்த முரண் வெளிகளை கடந்து தான் தமிழர்களுக்கான அரசியல் இலக்கினை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் தரப்பில் உள்ள இந்த அரசியல் முரண் சிங்கள தேசத்திற்கும் சர்வுதேசத்திற்கும் சாதகமான பல அம்சங்களை கொண்டுள்ளது.

குரங்கு பிரித்த அப்பம் போல எங்கள் முரண்பாடுகளை மூலதனமாக்கி சிங்கள தேசம் எமக்கான ”விடுதலையை” தானே வழங்கி தானே உண்டு மகிழப் போகின்றது.

குரங்கு பிரிக்கும் அப்பத்தின் அளவுகளை சரிபார்க்க சர்வதேசம் தனது 9 வாசல்களையும் மூடிக் கொண்டு தலையினை வலம் இடமாக மட்டும் ஆட்டும் தகைமையுள்ள கண்காணிப்பாளர்களை தன்சார்பாக நியமித்திருக்கின்றது. என்ற இந்த முன்னுரையுடன் இந்த கட்டுரையை தென்னாபிரிக்காவில் இம்மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றோம்.

இந்த மாநாட்டினை தென்னாபிரக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் 15க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமிழீழத் தாயகம், புலம், தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து பங்கெடுத்திருந்தன.

இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்
நவநீதம்பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு முன்னரும் இது போன்ற சந்திப்புகள் வெளிநாடுகளில் மூடிய அறைகளுக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வலிமை பெற்றிருந்த காலப் பகுதியில் அவர்களை பலவீனப்படுத்தி அழிப்பதற்கான திட்டங்களில் பின்புலமான இருந்த சில அமைப்புகள் மீண்டும் தமது செயல்பாடுகளை ஆரம்பித்திருந்தன.

ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் தன்னார்வ நிறுவனமான பேர்கோப் பவுண்டேஷன் கடந்த காலங்களில் ” மோதலைத் தவிர்த்து, புலிகளை ஜனநாயகப்படுத்துவது எப்படி” , என்பது தொடர்பான ஆய்வினையும் “புலம்பெயர் தமிழர்களை போராட்டத்திலிருந்து மாற்றுவது” குறித்த ஆய்வினையும் மேற்கொள்ளவதற்கு ஆதரவளித்திருந்தமை கவனிக்க வேண்டிய விடயங்களில் முக்கியமானது

இந்த பின்னணியினை கொண்டுள்ள பேர்கோப் பவுண்டேஷன் தமிழர் தரப்பிற்கும் சிங்கள தரப்பிற்கும் இடையிலான பேச்சுக்கான அனுசரணையாளராக தன்னை அடையாளப்புடுத்திக் கொண்டு மீண்டும் களமிறங்கியது.

ஆரம்பத்தில் சகல தரப்புகளையும் கொண்டதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த உரையாடல் படிப்படியாக தங்களது வட்டத்திற்குள் நிற்ககக் கூடியவர்களை மட்டும் கொண்டதாக தன்னை வரையுறுத்துக் கொண்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “பேர்கோஃப் ஃப‌வுண்டேசன்” ( Berghof Foundation ) நிதி வளத்தைப் பெற்றுக்கொள்ளும், உலகத் தமிழர் பேரவை,

மங்கள சமரவீர மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் திரைமறைவுப் பேச்சுக்களை, லண்டனில் நடத்திய போது, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சில ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து பின்னர் வழமை போலவே மறந்தும் மறைந்தும் போனது.

குரங்கு பிரித்த அப்பம் போல எங்கள் முரண்பாடுகளை மூலதனமாக்கி  சிங்கள தேசம் எமக்கான ”விடுதலையை” தானே வழங்கி தானே உண்டு  மகிழப் போகின்றது.

குரங்கு பிரிக்கும் அப்பத்தின் அளவுகளை சரிபார்க்க சர்வதேசம் தனது 9 வாசல்களையும் மூடிக் கொண்டு தலையினை வலம் இடமாக மட்டும்  ஆட்டும் தகைமையுள்ள கண்காணிப்பாளர்களை  தன்சார்பாக நியமித்திருக்கின்றது

 

“பேர்கோஃப் ஃப‌வுண்டேசன்” ஏற்பாடு செய்த இந்த கூட்டங்களில் பல சுற்றுக்களில் கலந்து கொண்ட தாயகத்திலும் பலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் பிரதிநிதிகளை அங்கு உரையாடப்பட்ட விடயங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் யுத்தக் குற்றங்கள், இன அழிப்பு, போற்குற்ற விசாரணை பொறுப்புக் கூறல் சுய நிர்ணய உரிமை என கொஞ்சம் வில்லங்கமான விடயங்களை முன்னிலைப்படுத்த முயன்ற கஜேந்திர குமார் பொன்னம் பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ,ஈழத் தமிழர் மக்கள் அவை போன்றவை இலாவகமாக களற்றிவிடப்பட்டன. அவை பேனாதும் வந்ததும் தெரியாமல் அடங்கி
விட்டன.

அப்போது களற்றிவிடப்பட்ட தரப்புகளோடு இப்போது தென்னாபிரிக்காவில் மனித உரிமைகள் பேரவையின் முன்னளால் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளார்ள்.

இதில் புதிதாக ”புரட்சிக்” கூட்டணி அமைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரனும் எம்.கே சிவாஜிலிங்கமும் உள்வாங்கப்பட்டுள்ளளார்.

இந்த தென்னாபிரிக்க சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் சியான் சின்னராசா ஈழத்தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலும் பரிகாரநீதியுமே பிரதானமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.

தொடர்ச்சியான உரையாடல்களுக்கான ஓர் தொடக்க புள்ளியாக இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டில் அரசியற் தீர்வுத்திட்டம் குறித்து உரையாடிக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

பல்வேறு தரப்பினராலும் இனநல்லிணக்கம் குறித்த செயன்முறைக்கு முன்னராக, ஈழத்தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலும் பரிகாரநீதியுமே வலியுறுத்தப்பட்டாகவும் சியான் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களது விவகாரம் நோக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியற் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், இராணுவ
வெளியேற்றம், ஆறவாது திருத்தச்சட்ட நீக்கம் உட்பட இரு நாள் அமர்வின்
நிறைவில் ஏழு விடயங்கள் பரிந்துரைகளை கொண்ட தீர்மானமாம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை எழுதப்படும் வரை இந்த தீர்மானங்கள் ” உத்தியோகபுர்வமாக”
வெளியிடப்படவில்லை. – ஆனால் வெளியாகியிருந்தது.

இலங்கை விவாகரத்தை மூடிவைத்துவிட சர்வதேசம் தயாராகி வருகின்றது.கடும் போக்குவாதங்களை கொண்டுள்ள தரப்புகளை அழைத்து பேசி சமரசம் செய்யவே அது முனைகின்றது என்பதை இந்த சந்திப்புகளின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

துரதிஸ்டவசமாக யார் அழைத்தாலும் போகின்ற அல்லது போக வேண்டிய
நிலையிலும் யார் பேசினாலும் கேட்க வேண்டிய நிலையிலும் நாங்கள்
இருக்கின்றோம். இதனை மாற்றியமைக்க கூடிய சக்தி எமது ” ஒற்றுமை” யில் மட்டுமே தங்கியிருக்கின்றது.

மறுபுறம் யுத்தம் தின்று தீர்த்த மண்ணில் இருந்து மீண்டும் வாழ முனையும்
எங்கள் உறவுகளுக்கான உதவிக் கரங்கள் ஆயிரமாயிரமாய் உயர வேண்டும்.
தமிழினியின் மரணம் போல மரணத்திற்கு பின்பாக எங்கள் இயலுமைகளையும் இயலாமைகளையும் சுய பரிசோதனை செய்வதற்கு முன்பாக மாற்றத்தை எங்களில் இருந்து தொடங்க நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

தேவதூதனின் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் காலம் எங்களை கடந்து ஓடிப் போய்விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சி.வி யும் … சம்பந்தனும்… சுமந்திரனும் … கஜேந்திரனும்… மாறும் வரை அல்லது மாற்றப்படும் வரை நாம் காத்திருக்க முடியாது தாயக மக்களின் குரலும் புலம்பெயர்ந்த மக்களின் குரலும் ஒன்று பட்டு ஒலித்தால் மட்டுமே விடியல் பிறக்கும். எல்லா கைகளும் சேர்ந்து இழுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் .மாற்றம் எங்களில் இருந்தே பிறக்க
வேண்டும். ” அதற்கு இவர்கள் தேவையில்லை அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *