‘எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய படைகள் தயார்’ – அருண் ஜெட்லி

Facebook Cover V02
arun_jetleyஇந்திய படைகள் போதுமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன், எவ்வித நெருக்கடியையும் சமாளிக்க தயாராக இருப்பதாக அருண் ஜெட்லி உறுதியுடன் தெரிவித்தார்.

டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மிரட்டி வரும் சீனா, திபெத் பகுதியில் படைகளை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதன்படி கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), இ.டி.முகமது பஷீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), மனோஜ் ரஜோரியா (பா.ஜனதா) ஆகியோர் பல்வேறு துணை கேள்விகள் கேட்டனர்.

குறிப்பாக இந்திய ராணுவத்தின் தயார் நிலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என துணை ராணுவ தளபதி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது பற்றி கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பினார். மேலும் போர் நடைபெற்றால் 22 நாட்களுக்கு தேவையான வெடிபொருட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறியிருப்பதையும் உறுப்பினர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதற்கு ராணுவ மந்திரி அருண் ஜெட்லி பதிலளிக்கையில், ‘பாதுகாப்பு தயார் நிலை என்பது ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். அந்தவகையில் எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் வகையில் போதிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் படைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ‘உள்நாட்டிலேயே ஆயுதங்கள் தயாரிப்பு நடவடிக்கையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இது பல வருடங்களாக நடந்து வருகிறது. நாட்டில் உள்ள எந்த ஒரு ஆயுத தளவாட தொழிற்சாலையும் மூடப்படாது. இதன் மூலம் அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வேலை இழப்பார்களோ என்ற சந்தேகமும் தேவையில்லை’ என்றும் தெரிவித்தார்.

இதைப்போல இந்திய ராணுவத்துக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்கள் வாங்குவது குறித்த கேள்வி ஒன்றுக்கு ராணுவ இணை மந்திரி சுபாஷ் பாம்ரே பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘இந்திய ராணுவத்துக்கு ரூ.1.07 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் பெறுவதற்காக இந்திய வியாபாரிகளுடன் கடந்த 3 ஆண்டுகளில் 99 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரூ.1.23 லட்சம் கோடி மதிப்பிலான 61 ஒப்பந்தங்களும் போடப்பட்டு உள்ளது’ என்றார்.

Share This Post

Post Comment