வென்றது தர்மம்!! சூது கவ்வுமா ?

ekuruvi-aiya8-X3

purosதமிழக (காபந்து) முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவிலுள்ள ஜெயலலிதா ஜெயராமின் சமாதியின் முன்னால் வந்து உட்கார்ந்த தருணம் இப்போதும் ஞாபகமிருக்கின்றது. அந்த 41 நிமிடங்களை பெரும் பதற்றத்தோடும் ஆர்வத்தோடும் ஒட்டுமொத்த தமிழகமே பார்த்துக் கொண்டிருந்தது. இந்தக் கட்டுரையாளரும் ‘ஓ.பன்னீர்செல்வம் மௌனத்தின் சாட்சியா, மர்மத்தின் நீட்சியா?” என்று சமூக ஊடகமொன்றில் எழுதிவிட்டு காத்திருந்தார்.

அந்த 41 நிமிடங்களின் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் முதல் தடவையாக மௌனம் கலைத்தார். சற்று உரக்கப் பேசினார். அப்போதிலிருந்து ஒரு வார காலம் தாண்டியும் தமிழகம் விழித்துக் கொண்டிருக்கின்றது. தொலைக்காட்சிகளில் ‘Breaking News’ மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றது. தமிழக மக்களும் அயலகங்களிலுள்ள தமிழ் மக்களும் தமிழக அரசியல் குழப்பம் பற்றிய செய்திகளின் ஆக்கிரமிப்பினால் பதற்றமாகவே இருக்கின்றார்கள். அதுவொரு மயக்க நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஜெயராமின் மறைவை அடுத்து, தமிழகத்தில் அரசியல் ஸ்திரமின்மை உருவானது. உருவாக்கப்பட்டது. இதில், பல்வேறு தரப்புக்களுக்கும் பங்குண்டு. ஆளும் கட்சியொன்றின் ஒட்டுமொத்த அதிகாரத்தினையும் ஒருவரே வைத்துக் கொண்டிருந்த நிலையில், அவரின் மறைவு நிச்சயம் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும். அல்லது உருவாக்குவதற்கான ஏதுகைகளை வழங்கும். அதுதான், இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு காரணம். அதிமுக ஒரு எஃகு கோட்டை என்று ஜெயலலிதா ஜெயராம் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றார். யாராலும் உடைக்க முடியாது என்றும் முழங்கி வந்திருக்கின்றார். ஆனால், இன்றைக்கு அந்த எஃகு கோட்டையின் சுவர்களை பலரும் மெல்ல மெல்ல தகர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதில், அதிமுகவின் விசுவாசிகளும் அடக்கம் என்பதுதான் முக்கியமானது. இதனை, மேய்ப்பன் இல்லாத ஆட்டுக் கூட்டத்தின் நிலையோடு ஒப்பிட முடியும்.

ஜெயலலிதா ஜெயராமின் மறைவையடுத்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி, தமிழக ஆட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான எத்தனங்களைச் செய்ய ஆரம்பித்தது. அதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு உருவாக்கி நீட்டிக் கொள்வது என்கிற சிந்தனையின் போக்கில் அதிமுகவுக்குள் குழப்பங்களை ஏற்படுத்துவதிலும், அதிகாரப் போட்டிகளையும் உருவாக்குவதில் காய்களை நகர்த்தியது. ஆனால், அதனை உணர்ந்து கொண்டிருந்தாலும் அதிமுகவின் அதிகார பீடம் அல்லது அதற்கு புதிதாக வந்த சசிகலா நடராஜன் தலைமையிலான குழு, சுதாகரிக்காமல் இருந்தது. அத்தோடு, தமிழக மக்களின் எண்ணங்களை உள்வாங்காமல் அதிகாரத்தில் அவசரமாக ஏறுவதில் அக்கறை கொண்டு இன்றைக்கு கோட்டை விட்டிருக்கின்றது. சசிகலா நடராஜனின் அவசரமும், அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக நடத்த ஆரம்பித்ததுமே அதிமுகவின் இன்றைய பிளவுக்கு காரணமானது. அதுதான், என்றைக்குமே அடக்கத்தின் உருவமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆக்ரோசம் கொண்ட நாயகனாக உருமாறவும் வைத்தது. தார்மீக ரீதியில் தமிழக மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் வைத்தது.

“முதலமைச்சர் பதவியை பலவந்தப்படுத்தி பறித்துக் கொண்டார்கள்“ என்கிற குற்றச்சாட்டோடு எழுந்த ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் குறிப்பிட்டளவில் வெற்றி பெறும் கட்டத்தினை அடைந்திருக்கின்றார். மறுபுறத்தில், அதிமுகவின் ஒட்டுமொத்த அதிகாரமும் உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு இலகுவாக வர முடிந்த சசிகலா நடராஜன் கடந்த கால வினைகளின் விளைவை சந்தித்து நிற்பதினூடு, அரங்கிலிருந்து அகற்றப்படும் சூழலுக்கு உள்ளாகியிருக்கின்றார்.

அதாவது, சசிகலா நடராஜன்  உள்ளிட்ட மூவர் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கின்றார்கள். (பிரதான குற்றவாளியான ஜெயலலிதா ஜெயராம் மறைவையடுத்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்). அவர்கள் இனி மேன்முறையீடு செய்தாலும், 0.0001 வீதமே விடுதலையாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சட்ட வல்லுனர்கள்  கூறுகின்றார்கள். இதன்மூலம்,  சசிகலா நடராஜன் இனி 10 வருடங்களுக்கு நேரடி அரசியலில் ஈடுபட முடியாமல் போகும். அதாவது, தேர்தல்களில் போட்டியிட முடியாது. அரச பதவிகளை வகிக்க முடியாது. அப்படியான நிலையில், அவர் எப்படி தொடர்ந்தும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை தக்க வைக்கப் போகின்றார் என்கிற கேள்வி எழுகின்றது? இன்னும் சில நாட்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தன்னுடைய கட்டுக்குள் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தாலும், எதிர்வரும் நாட்களில் காட்சிகள் இன்னமும் மாறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய முதலமைச்சர் பதிவியிலிருந்து 9 நாட்களின் முன்னால் விலகிய போது, சசிகலா நடராஜன் பதவியேற்பதற்கான அனுமதியைக் கோரி தமிழக பொறுப்பு ஆளுநரிடம் கடிதத்தை ஒப்படைக்க முனைந்தார். ஆனால், ஆளுநர் தமிழகத்துக்கான தனது வருகையை ஒத்திப் போட்டு தமிழகத்தில் ஸ்திரமற்ற தன்மையை உருவாகும் காட்சிகளுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். அதனாலேயே, ஓ.பன்னீர்செல்வமும் சிந்திக்கவும், திரைக்கதையை தெளிவாக எழுதி முடித்துக் கொண்டு ஜெயலலிதா ஜெயராமின் சமாதியின் முன்னால் வந்து உட்காரவும் முடிந்தது.

ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தில் தமிழக மக்களுக்கு பெரும் சந்தேகம் உண்டு. அதிலுள்ள மர்மங்களின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வந்தது. சசிகலா நடராஜன் மீது, ஜெயலலிதா ஜெயராமின் அண்ணன் மகள் தீபா ஆரம்பத்திலிருந்து குற்றஞ்சாட்டி வந்தார். அதிமுகவின் அதிகாரத்துக்கான போட்டியை முதலில் ஆரம்பித்தவர் தீபா. அதற்கு மக்களின் குறிப்பிட்டளவான ஆதரவும் இருந்தது. அந்த நிலையிலேயே, ஜெயலலிதா ஜெயராமால் இரண்டு தடவைகள் தனக்குப் பதிலாக முதலமைச்சராக ஆக்கப்பட்டவர் என்கிற குறியீடும்- அடையாளமும் ஓ.பன்னீர்செல்வத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. அத்தோடு, மத்திய அரசாங்கத்தின் குறிப்பிட்டளவான ஒத்துழைப்பும் உரமேற்றியது.

இந்தக் கட்டுரையின் நடுப்படுதியை எழுதிக் கொண்டிருக்கின்ற போது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மெரினாவிலுள்ள ஜெயலலிதா ஜெயராமின் சமாதிக்கு வருகை தந்திருக்கின்றார். அவரோடு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வந்திருக்கின்றார். அவர்களின் அரசியல் ரீதியான இணைவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்னொரு பக்கத்தில், குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னணியில் முதலமைச்சர் பதவியை கோருவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்ட சசிகலா நடராஜன், தன்னுடைய சார்பில் எடாப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க அனுமதி கோரியிருக்கின்றார். பன்னீர்செல்வம் மௌனம் கலைத்த அடுத்த நாள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் சென்னையிலிருந்து 77 கிலோமீற்றம் தூரத்துக்கும் அப்பாலுள்ள கூவத்தூர் என்கிற கிராமத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டார்கள். அது சிறை வைப்புக்கு ஒப்பான காட்சிகளாக தமிழகத்தினால் உணரப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படுகின்ற இரவு நேரத்திலும், கூவாத்தூரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே எப்படியாவது அழைத்துவர வேண்டும் என்கிற முனைப்புக்களில் பலரும் ஈடுபட்டிருக்கின்றார்கள். அந்த விடுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட தமிழக அரசியலில் அதிகார போட்டி சிறைவைப்புக்களையும், மின்சாரத்துண்டிப்பையும் முன்னிறுத்திக் கொண்டு சதிராட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

இப்போது, தமிழக மக்களிடம் இருக்கின்ற ஒரே எதிர்பார்ப்பு. நிலையான தமிழக ஆட்சி. அது, ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் ஒத்திசைவதாகவும் இருக்கின்றது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கான ஆட்சிப் பயணத்தை மத்திய அரசாங்கமும், திமுகவும் ஒரு வகையில் அமைத்துக் கொடுப்பதில் ஆர்வமாகவும் இருக்கின்றார்கள். ஆனால், திராவிட அரசியல் என்கிற அடையாளம் பெற்ற தமிழகத்தின் அரசியலில் இந்துத்துவா என்கிற அடையாளம் கவ்விக் கொள்ளுமா என்கிற அச்சமும் மக்களிடம் எழுந்திருக்கின்றது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், சதிகாரர்கள் தோற்கடிக்கப்படுவதும் முக்கியமானது. அதேயளவுக்கு இந்துத்துவா என்கிற மதவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான ஒருங்கிணைவும் முக்கியமானது. அது, பாரதிய ஜனதாக் கட்சியின் வடிவில் வந்தாலும், ஆர்எஸ்எஸ் வடிவில் வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும். அதில், தமிழக மக்கள் குறியாக இருக்க வேண்டும்.

அதிமுகவை கைப்பற்றுவதற்கான போட்டியில் வெளித்தரப்புக்களின் ஆதரவினை ஜெயலலிதாவும்  கடந்த காலத்தில் கோரியிருக்கின்றார். ஆனாலும், அதிகாரத்தினை அடைந்த பின்னர், அந்தத் தரப்புக்களை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளி நிலைத்து நின்றார். இப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாலும் அப்படியான கடப்பாடு ஒன்று உண்டு.

சிலவேளை ஓ.பன்னீர்செல்வத்தினால் அதிமுகவின் அதிகாரத்தினை கைப்பற்ற முடியாமல் போனால், சசிகலா நடராஜன் தரப்பு, மன்னார் குடி குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தாக மாறும் வாய்ப்பும் உண்டு. எனினும் அரசியல் சதிராட்டத்தில் எதுவுமே நிரந்தமில்லை. ஆனாலும், அதிமுக ஏக தலைமை என்கிற நிலையிலிருந்து அதிகாரங்களைப் பகிரும் தலைமையாக மாறி, கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கி வைத்துக் கொள்வதன் மூலமே மீண்டும் மீண்டும் பிளவுகள் ஏற்படாமல் நிலைத்து நிற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். அதுவே, எஃகு கோட்டையை தக்க வைக்கவும் உதவும்.

எனினும், எப்போதாவது தர்மம் வெல்வதும், மீண்டும் மீண்டும் சூது கவ்வுவதுமே அரசியல் சாதிராட்டத்தின் அடிப்படை. பொறுத்தருந்து பார்க்கலாம் தமிழகத்தின் இன்றை அரசியல் மாற்றம் எவ்வளவு படிப்பினைகளை வழங்கிச் செல்கின்றது என்று?!

eகுருவி பத்திரிகைக்காக புருஜோத்தமன் தங்கமயில் அவர்களால் 2/14/2017 அன்று எழுதப்பட்ட்து

 

Share This Post

Post Comment