‘இன்செல்’ “INCEL” – புதிதாகப் பிறப்பெடுக்கும் ‘கட்டாய பிரம்மச்சாரியம்’ ??

ekuruvi-aiya8-X3

‘இன்செல்’ “INCEL” – புதிதாகப் பிறப்பெடுக்கும் ‘கட்டாய பிரம்மச்சாரியம்’ ??

இன்செல் குழுமம் என்பவர்கள் யார், ஏன் இவர்கள் பற்றி இப்போது பேசப்படுகிறது, இவர்களுக்கும் ரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன-பொதுமக்கள் தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் பலரும் புருவத்தை உயர்த்துவதைப் பார்க்க முடிகிறது.

ரொறன்ரோவின் மத்திய பகுதியில், யங் அன்ட் பின்ஞ் சந்திப்பில் இடம்பெற்ற திட்டமிட்ட வாகன விபத்தில், பத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். செனக்கா கல்லூரியில் கல்வி பயிலும், றிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அலெக் மினாசியன் என்ற மாணவர், வாடகைக்குப் பெற்றுக்கொண்ட ஒரு வெள்ளைநிற வாகனத்தை (வான்), மக்கள் செறிவாக நடமாடும் முக்கிய சந்திகளில் ஒன்றான யங்-பின்ஞ் சந்திப்பின் பாதயாத்திரிகருக்கான பகுதியில், கண்மூடித்தனமாக வேகத்தில் செலுத்தியதில் பத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட, 15ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

மிசோஜைனிஸ்ட்  (Misogynist) என்று அழைக்கப்படும் இவர்கள், பெண்களை வெறுப்பவர்கள். தாம் பெண்களால் கவரப்படவில்லை, பெண்கள் யாரும் தங்களை விரும்புவதில்லை, பெண்கள் தம்மை ஏற்றுக்கொள்ளவில்லை, பெண்களால் தாம் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறோம், இப்படி பெண்களால் புறக்கணிக்கப்படும் அளவுக்கு தமது தோற்றத்திலும் செயற்பாட்டிலும் குறையிருக்கலாம் என்றெல்லாம் எண்ணுகின்ற – நம்புகின்ற இந்த ‘இன்செல்’ என்ற குழுமத்துக்குச் சொந்தக்காரர்கள், உண்மையில் ‘வலுக்கட்டாய பிரமச்சாரிகளாக’ அறியப்படுகிறார்கள். இவர்களது பிரதான இலக்கு பெண்களாக இருந்தாலும், ஆண்-பெண் ஜோடிகளைப் பழிவாங்குவதையும் இவர்கள் தங்களது எண்ணத்தில் கொண்டிருக்கிறார்கள் என்று உளவள ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

பெண்களுடன் தொடர்பைப் பேணுவதையும், பெண்களுடன் உறவாடுவதையும் விரும்பும் இவர்களுக்கு, பெண்கள் தம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஒருவித உணர்வு படிப்படியாக வளர்ந்து, இறுதியில், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்கள், இதன் காரணமாக பெண்களைப் பழிவாங்க வேண்டுமெனும் மனப்பாங்குடன் தங்கள் செயற்பாடுகளைத் திட்டமிடுகிறார்கள். தாழ்வுமனப்பான்மையில் சிக்கும் பலர், தற்கொலைக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், இதற்காக யாரையாவது பழிவாங்கிவிட்டே தான் இறக்க வேண்டுமென்று நினைக்கும் ஏனையோர், பெண்களைப் பழிவாங்குவதற்கான திட்டமிடலை ஆரம்பிக்கிறார்கள்.

Incel (இன்செல்) என்ற சொற்பதம், ‘involuntarily celibate’ என்ற ஆங்கிலத் தொடரிலிருந்து, அதாவது ‘கட்டாய பிரம்மச்சாரியம்’ என்பதிலிருந்து உருவானது. 2014ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், 22 வயதான எலியட் றொட்ஜர் என்ற பிரித்தானிய இளைஞர், திடீரென ஆறு பேரைப் படுகொலை செய்ததுடன், தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிகழ்வு, பலரையும் இதற்கான காரணத்தை ஆராயத் தூண்டியது. ஆய்வுகளின் இறுதியில், எலியட் றொட்ஜர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற நீண்ட கடிதத்தில், இத்தகைய பெண் வெறுப்புணர்வே இதற்கான பிரதான காரணமென்பது கண்டறியப்பட்டதுடன், மனநல மருத்துவ நிபுணர்களின் மேலதிக ஆய்வில், இப்படி ‘இன்செல்’ என்ற ‘பெண் வெறுப்புமிக்க’ ஒரு சமூகம், அதாவது ‘கட்டாய பிரம்மச்சாரியத்தில்’ வாழும், ‘பெண்களை வெறுக்கும்’ சமூகமொன்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கென இரகசிய இணையத்தளங்கள், விவாதத் தளங்கள், வலைப் பதிவுகள், சமூக வலைத்தள குழுமங்கள் என்று பலவும் இருப்பது போன்ற இன்னோரன்ன தகவல்கள் பின்னர் வெளியானது.

தற்போது யங்-பின்ஞ் சந்திப்பில் இந்த வாகனத் தாக்குதலை மேற்கொண்ட நபரும், அவரது சமூக வலைத்தளத்தில் எலியட் றொட்ஜரின் செயற்பாட்டை ஆதரிக்கும் கருத்துக்களைப் பிரசுரித்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணக்கருவைக் கொண்டவர்கள் பெரிய அளவில் இல்லை என்ற கருத்து முதலில் நிலவியது. ஆனால், அலெக் மினாசியன் நடத்திய துணிகரத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ‘இன்செல்’ உணர்வாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியில், மிகப் பெரிய குழுமங்கள், சமூக வலைத் தளங்கள், இணையத் தளங்கள் என்று, நிறையவே சுறுசுறுப்பாக இயங்கும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

பரவலாக இடம்பெறும் தற்கொலைகளுக்கும், இத்தகைய பெண் வெறுப்புணர்வு ஒரு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Quintus

Share This Post

Post Comment