இலக்கிய நோபல் பரிசை ஏற்றார் பாப் டைலான்

ekuruvi-aiya8-X3

Bob-Dylan-has-finally-accepted-his-Nobel-prize-Swedishபிரபல இசைக் கலைஞர் பாப் டைலான், தனக்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசை சுவீடனில் நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் பாப் டைலானுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால், நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆன நிலையிலும் அதனை அவர் ஏற்றாரா அல்லது நிராகரித்தாரா என்பது குறித்து பாப் டைலான் எந்த பதிலையும் கூறவில்லை. இதனால் நோபல் பரிசை அவர் ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நோபல் பரிசு வழங்கும் விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. அவரது நோபல் பரிசு மற்றும் பரிசு பணம் உள்ளிட்டவை சுவீடன் அகாடமியிடமே இருந்தது.

இந்நிலையில், ஒரு சில நாட்களில் இசைக் கலைஞர் பாப் டைலான் ஸ்டாக்ஹோம் வந்து நோபல் பரிசை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கடந்த வாரம் சுவீடன் அகாடமி நிரந்தர செயலாளர் சாரா டேனியஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பாப் டைலான் நேற்று முன்தினம் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் வந்திருந்தார். இது தொடர்பாக சுவீடன் அகாடமியின் நிரந்தர செயலாளர் சாரா டேனியஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது,

“ ஸ்டாக்ஹோமில் நடந்த நிகழ்ச்சியில் இசை கலைஞர் பாப் டைலானிடம் நோபல் பரிசு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகாடமி உறுப்பினர்கள் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் நோபல் பரிசை பெற்ற பாப் டைலான் ஏற்புரை வழங்காததால் அவருக்கான நோபல் பரிசு தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 10ம் திகதிக்குள் தனது ஏற்புரையை சிறு பேச்சு, காணொளி பதிவு அல்லது ஒரு சிறு பாடலாக கூட பாப் டைலான் வழங்கவேண்டும். இதனை செய்ய தவறும்பட்சத்தில் பரிசு தொகையான ரூ.5 கோடி 77 லட்சத்தை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.’

 

 

Share This Post

Post Comment