இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 21-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது

Facebook Cover V02

edappadiசென்னை வர்த்தக மையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் 21-ந் தேதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் நிபந்தனை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

அப்போது கட்சி துணை பொதுச்செயலாளர் என்கிற முறையில் டி.டி.வி.தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டும் எனவும், கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.

ஆனால், டி.டி.வி.தினகரன் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.பி. அன்வர் ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 21-ந் தேதி (புதன்கிழமை) மாலை நடக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தான் நடைபெற்றது. அவருடைய வழியிலேயே இந்த ஆண்டும் வர்த்தக மையத்திலேயே நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அவர் கூறினார்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்ற நிபந்தனை நிராகரிக்கப்பட்டுள்ளது, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் மேலும் பிளவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் 21-ந் தேதி தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment