மத்திய ‘பட்ஜெட்’ எப்படி? தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

arun_jatelyமத்திய ‘பட்ஜெட்’ குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க.தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட். நாட்டு பொருளாதாரம், வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட பட்ஜெட் இது.
இந்த பட்ஜெட் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல என்பதற்கு தனி நபருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்பதே உதாரணம். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் இல்லை, அதானியோ, அம்பானியோ மட்டும் பயன் அடையப்போவதில்லை. சிறு குறு தொழிலுக்கு உதவி செய்யும் பட்ஜெட் இது.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:-
பா.ஜ.க. அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், பொதுமக்களின் வாக்குகளை பெற எடுக்கப்பட்டுள்ள தந்திர முயற்சி ஆகும். மாயாஜால அறிவிப்புகளாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை இந்த பட்ஜெட் அளிக்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை இது என்பதைக் காட்டிலும் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்ட தேர்தல் அறிக்கை இது என்று கூறலாம்.
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
மக்களவை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, அதுவும் முறையாக செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி நரேந்திர மோடி அரசின் 5-வது நிதிநிலை அறிக்கை இந்திய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்து இருக்கிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இருக்கிறது. மாத ஊதியம் பெறுவோர் வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரி வரும்போது, அதில் எந்த மாற்றமும் செய்யப்படாதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மொத்தத்தில் பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை மூன்றரை ஆண்டுகால தோல்வியை எதிரொலிக்கிறதே ஒழிய, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இல்லை.
நிதிநிலை அறிக்கையை இந்தியில் தாக்கல் செய்ததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஜி.ராமகிருஷ்ணன்
சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காத பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்காத பட்ஜெட்டாக உள்ளது.
1 கோடி புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மக்களின் நலன்களை பற்றி கவலை கொள்ளாத பட்ஜெட்டாக உள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்த வருமான பிரிவினர் ஏமாற்றப்பட்டு உள்ளனர். மீண்டும் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் நிதி ஒதுக்கீட்டு தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கான வருவாய் ஆதாரங்கள் பற்றி பட்ஜெட்டில் வாய் திறக்கவில்லை. மொத்தத்தில் மோடி அரசின் 3 ஆண்டு கால படுதோல்விகளை மூடி மறைக்கும் வேலையில் மத்திய நிதி மந்திரி ஈடுப்பட்டிருப்பதை 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் அம்பலப்படுத்தி உள்ளது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்து இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்பது ஏற்புடையது அல்ல. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பாக இருக்கிறதே தவிர அதற்குண்டான செயல் திட்டம் குறிப்பிடப்படவில்லை. மொத்தத்தில் நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளித்து இருக்கிறது.
கடந்த பா.ஜ.க. ஆட்சி பட்ஜெட் போலவே இப்போதைய பட்ஜெட்டும் அமைந்துள்ளது. இத்தகைய பட்ஜெட்டானது அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை கொடுக்கும் பட்ஜெட்டாக அமையவில்லை.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-
பட்ஜெட்டில் விவசாயம், சுகாதார மேம்பாடு, கட்டமைப்பு மேம்பாடு இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தோற்றம் அளிக்கிறது. ஆனால் இந்த அறிவிப்புகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதைப் பொறுத்தே, இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டா? என்பதை முடிவு செய்ய முடியும்.
 
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
நாடு முழுவதும் 130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் 1000 பேருக்கு மட்டும் கல்வி உதவி என்பது மக்களை ஏமாற்றும் வேலை ஆகும்.
இந்திய மக்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் அரசு சலுகைகள் கிடைக் கும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் மக்களுக்கு நன்மை பயக்கும் தொலைநோக்கு திட்டம் இல்லாதது வழக்கமான சாதாரண பட்ஜெட்டாகவே உள்ளது.
வரவேற்பும்… எதிர்ப்பும்…
பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் ஆகியோர் ‘பட்ஜெட்’ ஏமாற்றம் அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆ.மணி அரசன் ஆகியோர் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related News

 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *