யோகா தினத்துக்கு மத்திய அரசு செலவு செய்தது எவ்வளவு?: புதிய தகவல்

ekuruvi-aiya8-X3

modi_yogaபிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகாசன தினமாக உலக நாடுகள் அணுசரித்து வருகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாபெரும் யோகாசன முகாமில் சுமார் 50 ஆயிரம் பங்கேற்று புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த யோகாசன முகாம்களுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு? என்று தகவல் அறியும் சட்டத்தின்கீழ் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு மத்திய பொது தகவல் அலுவலர் பானாமலி நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற யோகா முகாமுக்கு 16.40 கோடி ரூபாயும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற முகாமுக்கு 18.10 கோடி ரூபாயும் என கடந்த இரண்டாண்டுகளில் மொத்தம் 34.50 கோடி ரூபாயை மத்திய சுகாதாரத்துறையின்கீழ் இயங்கிவரும் ஆயுஷ் அமைச்சகம் செலவிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கணக்கு விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என அவர் பதிலளித்துள்ளார். இதேபோல், யோகா தினத்துக்காக இதர துறைகள் சார்பில் செய்யப்பட்ட செலவு தொடர்பான விபரங்களும் கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்யப்பட்ட செலவுகள் தொடர்பான துல்லியமான விபரங்கள் தேவை என்ற மனுதாரரின் கோரிக்கையை தகவல் ஆணையம் நிராகரித்து விட்டது. அந்த கணக்குகள் எல்லாம் பலநூறு பக்கங்களில் இருப்பதால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக பதில் தரப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment