கேரளா ரிசார்ட்டில் வெளிநாட்டவர்கள் உள்பட 69 சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிப்பு

Facebook Cover V02
kerala-resortகேரளாவில் கனமழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரண்டு நாட்களாக பெய்யும் பேய் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகங்கள் துரித கதியில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. சாலை துண்டிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் லாரிகள் மற்றும் சுற்றுலாப் பஸ்களின் நகர்வுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. கனமழையினால் தண்ணீர் வரத்து அதிகரித்து இடுக்கி அணையில் 5 ஷட்டர்களும் திறக்கப்பட்டது. மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மூணாறில் ரிசார்ட் ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 69 சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். ரிசார்ட்டிற்கு செல்லும் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருப்பவர்களில் 20 பேர் வெளிநாட்டு பயணிகள் என தெரியவந்துள்ளது. இதுபோன்று மலைப்பகுதிகளில் சாலைகள் நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்டு வருகிறது.
இப்போது ரிசார்ட்டில் சிக்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் அறிவுரையை வழங்கியுள்ளது.

Share This Post

Post Comment