ஜெயலலிதா கைரேகை : சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ekuruvi-aiya8-X3

JJ_16கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “ஜெயலலிதா சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி அவரது இடதுகை பெருவிரல் ரேகை தேர்தல் படிவத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த படிவத்தில் ஜெயலலிதா சுயநினைவோடுதான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இது தொடர்பான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் ஜெயலலிதா அடைக் கப்பட்டபோது எடுக்கப்பட்ட அவரது கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் டிசம்பர் 8-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த மாதம் 24-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஜெயலலிதா பெயரில் ஆதார் அட்டை பெறப்பட்டு இருந்தால் அதற்காக பெறப்பட்ட அவரது கைவிரல் ரேகை உள்ளிட்ட ஆவணங்களை ஆதார் ஆணையத்தின் தலைவர் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது பெறப்பட்ட அவரது கைரேகை மற்றும் கையெழுத்து பிரதி மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து கர்நாடக சிறைத்துறை சார்பில் நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், ஆதார் தகவல்கள் தனிப்பட்ட நபரின் உரிமை என்பதால் அதுபற்றிய விவரத்தை தாக்கல் செய்ய இயலாது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் கைரேகை குறித்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் ஏ.கே.போஸ் சார்பில் மூத்த வக்கீல் கிரி ஆஜரானார். அவர் வாதாடுகையில், கைரேகை சோதனை என்பது தனி மனிதரின் அந்தரங்க உரிமை தொடர்பானது என்றும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எனவே ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ஜெயலலிதாவின் கைரேகையை தாக்கல் செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டு நவம்பர் 24-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க கோரி டாக்டர் சரவணனுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Share This Post

Post Comment