பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

ekuruvi-aiya8-X3

film_news_anandan_640x360தமிழ்த் திரையுலகில் நீண்ட காலம் மக்கள் தொடர்பாளராகவும் தமிழ் சினிமா குறித்த வரலாற்றுத் தகவல்களை அளிப்பவராகவும் இருந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
தமிழ் சினிமா தொடர்பான பல ஆண்டுகால தகவல்களை ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்து வைத்திருந்தார்.

முதன் முதலாக ஃபிலிம் நியூஸ் என்ற பத்திரிகையில் இவரது படைப்புகள் வெளியானதையடுத்து, தனது பெயரை ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் என்று மாற்றிக்கொண்ட இவர், நீண்ட காலமாக தமிழக திரைநட்சத்திரங்கள் பலருக்கு செய்தித் தொடர்பாளராக பணியாற்றிவந்திருக்கிறார்.

தென்னிந்திய திரை வர்த்தக் கூட்டமைப்பு நடத்திய இதழில் பணியாற்றிய காலகட்டத்தில், தென்னிந்திய சினிமா தொடர்பான தகவல்களை அவர் சேகரிக்க ஆரம்பித்தார்.

சிறிது சிறிதாக சினிமாவின் துவக்க காலகட்டம் தொடர்பான தகவல்களையும் சேகரித்த அவர், கிட்டத்தட்ட 6,000 திரைப்படங்கள் குறித்த படங்களையும் தகவல்களையும் வைத்திருந்தார்.

2002ஆம் ஆண்டில், அவருடைய சேகரிப்புகளைப் பெற்றுக்கொண்ட தமிழக அரசு அவருக்கு நிதி உதவி அளித்தது.

அதற்கு அடுத்த ஆண்டில், தமிழ் சினிமா குறித்த புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய சாதனை படைத்த தமிழ் சினிமா வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல், அதில் பணியாற்றியவர்களின் பெயர்கள், அவை திரையரங்குகளில் எவ்வளவு நாள் ஓடியது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய சிறிய நூல் தொகுப்பை பத்திரிகையாளர்களுக்கு அனுப்புவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Share This Post

Post Comment