ஜெ.தீபா வீட்டில் நடந்த சோதனை விவகாரத்தில் கைதான போலி வருமானவரி அதிகாரி திடீர் பல்டி

ekuruvi-aiya8-X3

income_fraudஜெ.தீபா வீட்டில் நடந்த சோதனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி வருமானவரி அதிகாரி, இந்த விவகாரத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் திடீரென்று பல்டி அடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வீட்டில், கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரி அதிகாரி போல் நடித்து சோதனை நடத்திய போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன் என்பவரை, சென்னை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். வருமானவரி அதிகாரி போல அவர் அடையாள அட்டை வைத்திருந்தார். சோதனை நடத்தச் செல்லும்போது வருமானவரி அதிகாரிகள் எடுத்துச்செல்லும் வாரண்டையும் அவர் கையில் வைத்திருந்தார். அவை அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் போலீசாரிடம் முதலில் கொடுத்த வாக்குமூலத்தில், வருமானவரி சோதனை நாடகத்திற்கு பின்னணியில் செயல்பட்டவர் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம், வீடியோ காட்சியாக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

கைதான போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன் திடீரென்று பல்டி அடித்து நான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை இல்லை என்றும், ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் போலீசாரிடம் கூறியிருப்பதாக புதிய தகவல்கள் நேற்று வெளியானது.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஜெ.தீபா வீட்டில் நடந்த சோதனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன், முதலில் கொடுத்த வாக்குமூலத்தில் மாதவனுக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அவர் போலீசில் சரண் அடைவதற்கு முன்பு தனது வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்து வக்கீல் ஒருவர் மூலமாக தொலைக்காட்சி சேனல்களுக்கு கொடுத்துள்ளார். தொலைக்காட்சி சேனல்களில் அவரது வாக்குமூலம் வெளியானது. இதைப்பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர் முதலில் அதைப்பற்றி எனக்கு தெரியாது என்றார். தொலைக்காட்சி சேனல்களில் என்ன சொன்னாரோ? அதையே எங்களிடமும் வாக்குமூலமாக கொடுத்தார்.

அவர் சொன்ன தகவலில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. அவரோடு தொடர்பு உள்ள மேலும் 3 பேரை நாங்கள் தேடி வந்தோம். அவர்களில் ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர். அவர் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார்.

அவரை பிடித்து விசாரித்தபோது, பிரபாகரன் வருமானவரி அதிகாரி போன்ற அடையாள அட்டை, வருமானவரித்துறையினரின் வாரண்டு போன்றவற்றை போலியாக தயாரித்தது ஆனந்தவேல் நடத்தும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தான் என்று தெரியவந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்றும், பிரபாகரன் தான் போலி அடையாள அட்டை, போலி வாரண்டு போன்றவற்றை தயாரித்தார் என்றும் ஆனந்தவேல் குறிப்பிட்டார். போலி அடையாள அட்டை மற்றும் போலி வாரண்டு போன்றவற்றை தபால் மூலமாக மாதவன் தனக்கு அனுப்பி வைத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட கொரியர் நிறுவனத்தில் விசாரித்தபோது அதுபோன்ற தபால் எதையும் அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் வாட்ஸ்-அப் வாயிலாகத்தான் மாதவன் தன்னிடம் செல்போனில் பேசினார் என்று பிரபாகரன் குறிப்பிட்டார். அதுபற்றி ஆய்வு செய்தபோது அதுவும் உண்மை இல்லை என்று தெரியவந்தது.

அதன்பிறகு பிரபாகரன் கூறியது பொய் என்று தெரியவந்ததால் அவரிடம் விசாரிக்க வேண்டிய முறையில் தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகு தான் கூறியது அத்தனையும் பொய் என்று பிரபாகரன் ஒப்புக்கொண்டார்.

பங்குமார்க்கெட் தொழிலில் தனக்கு ரூ.20 லட்சம் கடன் இருந்ததாகவும், அந்த கடனை அடைப்பதற்கு வருமானவரி அதிகாரி வேடத்தில் சென்று ஜெ.தீபா வீட்டில் பணம் பறிக்க இதுபோன்ற நாடகத்தை நடத்தியதாகவும் பிரபாகரன் குறிப்பிட்டார். வக்கீல் ஒருவர் சொன்ன ஆலோசனையின் பேரில் பொய்யான வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்து அதை தொலைக்காட்சி சேனல்களுக்கு கொடுத்ததாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுடன் இன்னும் விசாரணை முடிவடையவில்லை. அவருக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க உள்ளோம். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மாதவன் தவறு செய்யவில்லை என்றால் அவர் ஏன் தலைமறைவாக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபாகரன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் தனக்கு எதிராக இருந்ததால், போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் மாதவன் தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், மாதவன் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று போலீசார் கூறினார்கள். தன்மீது பிரபாகரன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இனிமேல் மாதவன் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சென்னை போலீசார் நேற்று முன்தினம் இரவு புதுவை வந்தனர். அண்ணா சாலையில் உள்ள அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். பிரபாகரன் எப்போதும் 3 செல்போன்கள் பயன்படுத்துவது வழக்கம். லேப்-டாப்பும் பயன்படுத்துவார். இதன் மூலம் அவர் ஓட்டலில் இருந்தபடியே பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதிலும் ஈடுபட்டுள்ளார்.

போலீசார் அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். ஓட்டல்களில் வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்தினர். ஓட்டலில் இருந்த கேஷியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் விசாரணைக்காக அவரையும் போலீசார் சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.

Share This Post

Post Comment