விடுதலையின் பெயரால் சூறையாடப்படும் நிதி – “தலைவர் வரும்போது திரும்பிக் கொடுப்போம்”

 • ekuruvinight-date

  இலங்கைக்தீவின் மன்னாரில் இந்த மாதத்தின் 12ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 40 வயதான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அந்தப் பகுதியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
  2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கான அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டவர் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன். 2012ஆம் ஆண்டு, புனர்வாழ்வு திட்டம் முடிவடைந்த பின்னர், மன்னாரில் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் வாழ்ந்து வந்தவர்.

  தனது குடும்பத்தின் நிரந்தரக் குடியிருப்பிற்கான வீடு கட்டும் பணியில் தனது இரண்டு நண்பர்களுடன் ஈடுபட்டிருக்கையில், சினைப்பர் துப்பாக்கி தாரியினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

  இலங்கையில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குறி வைக்கப்படுவது இது முதல் தடவையல்ல. புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு முனைந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் போன்றவர்களின் பாதுகாப்பு இலங்கைத்தீவில் இன்னமும் கேள்விக் குறியாக உள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் எமக்கு நினைவு படுத்துகின்றன.tamils_block_thegardiner

   

   

   

  யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் நிலவுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்தின் மட்டத்தில் பரப்புரைப் பிரச்சாரத்தை மேற்கொண்டாலும், முன்னாள் போராளிகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக நோக்கப்பட்டவர்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருவதை களநிலை அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது என்ற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.

  இலங்கதாஸ் பத்மநாதன் 

  தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து ஜந்து ஆண்டுகளைக் கடத்தி விட்டோம். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் முன்னர் தமிழர் சமூகத்தினால் (குறிப்பாக புலம்பெயர் தமிழர்களினால்) கதாநாயகர்களாக கொண்டாடப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் இன்றைய அன்றாட வாழ்க்கை குறித்த கேள்வியை எம்மில் பலரும் எழுப்பாமல் மழுப்பல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். புலம்பெயர் நாடுகளில் மூச்சுக்கு முன்னூறு முறை விடுதலை குறித்தும், மாவீரர்கள் குறித்தும் பேசுபவர்கள் முன்னாள் போராளிகள் குறித்து கொண்டுள்ள அக்கறைதான் என்ன? இவர்களின் பாதுகாப்பிற்கும், அன்றாட வாழ்விற்கும் புலம்பெயர் தமிழர்கள் (குறிப்பாக விடுதலையின் பெயரால் “பணச்சடங்குகளை” மேற்கொண்ட அமைப்புக்களும், அதனை தமது சொந்தச் சொத்தாக்கியவர்களும்;) செய்ததுதான் என்ன?

  அன்றாட வாழ்வுக்கான உறுதிப்பாட்டுக்காக இவர்களுக்கு உள்ள வருமானம் என்ன என்ற கேள்வியை விடுதலையின் பெயர் சொல்லி தம்மை “வளப்படுத்தியர்கள்” நினைத்துண்டா? சில வருடங்களுக்கு முன்னர்வரை நாயகர்களாக கொண்டாடப்பட்டவர்கள் இன்று நாதியற்ற நிலையில் இருப்பதை விடுதலையின் பெயரால் இன்றும் புலம்பெயர் நாடுகளின் அரசியல் செய்பவர்கள் அறியாமல் இருக்கின்றார்களா?
  பெயர் தெரியாத பல ஆயரம் மாவீரர்களை நினைவு செய்யும் நிகழ்வை யார் ஏற்பாடு செய்வது என்பதில் நீ, நான் எனப் போட்டியிடும் அமைப்புக்களும், குழுக்களும் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் என்ன நகர்வுகளை மேற்கொண்டுள்ளன?
  யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் போலி எதிர்பார்ப்புக்களை முன்வைத்து புலம்பெயர் நாடுகளில் விடுதலையின் பெயரால் தொடரும் அவலம் குறித்து வாய்மூடி மௌனிகளாக தமிழர்கள் இருக்கும் மிகப்பெரிய தவறு நிகழ்ந்து வருவதை யார் அறிவார்?

  2009ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரே நோக்கில் பயணித்தவர்கள் இன்று தலைமைப் போட்டியில் பல்வேறு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் போட்டியிடுவது ஆரோக்கியமானதா? இது தகுந்த தலைமை இல்லாத இன்றைய நிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுகின்றதா? இந்தத் தலைமை குறித்த போட்டிகள் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தொடரும் நிலையில் விடுதலையின் பெயரால் தனிநபர் சொத்துக்குவிப்பு அதிகரித்துள்ளதான குற்றச்சாட்டுக்களும் ஆங்காங்கே வெளியாகி வருகின்றன.

  கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பையும், விடுதலைப் போராட்டத்தையும் காரணம் காட்டி சேகரித்த மக்கள் பணத்தை தமதாக்கி உரிமை கோரும் தனிமனிதர்களை அடையாளம் காணாமல் இருப்பதன் பின்னணிதான் என்ன?

  தனிநபர் வியாபார ஸ்தாபனங்கள், கட்டிடங்கள், ஆலயங்கள், ஊடகங்கள் என பல்வேறு இடங்களிலும் பிரித்து முதலிடப்பட்ட மக்கள் பணம் இப்போது ஒருசில “முதலைகளிடம்” மாத்திரமே தங்கியிருப்பதை யார் கேட்பார்?

  2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்த காலத்தில் கப்பல் அனுப்புகிறோம், ஆயுதம் வாங்குகிறோம் என்ற பெயரில் தனிநபர்களிடமும், வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தொழில் முனைவர்களிடமும் பெருமளவில் பணச் சேகரிப்பில் ஈடுபட்ட பலரும் அந்தப் பணத்தை தமது சொந்த கணக்கில் வரவு வைத்துள்ள அவலத்தை மறுக்கமுடியுமா?

  இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் சேகரிக்கப்பட்டு உரிய இடத்தை சென்றடையாத பணம், தற்போது அசையாச் சொத்துக்களாக கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவில் மாற்றமடைந்து வருவதை ஒரு சமூகமாக நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

  விடுதலைப் புலிகள் அமைப்பினால் முதலீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடங்கள் தனிநபர்களின் சொத்துக்களாக நாளாந்தம் சத்தமின்றி மாறிவரும் மாயத்தை யார் அறிவார்?
  சேகரிக்கப்பட்ட பணம் குறித்து கேள்வி எழுப்புவர்களிடம் “தலைவர் வரும்போது திருப்பிக் கொடுப்போம்” என்ற பழைய பல்லவியுடன் தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகள்
  தொடர்கின்றதுதானே.

  இவர்களின் “தலைவர் வரும்போது திரும்பிக் கொடுப்போம்” என்ற பதிலின் பின்னணியில் ஒரு உளவியல் காரணம் தங்கியிருந்தாலும், இயல்பு நிலையை ஏன் இவர்கள் ஏற்க மறுக்கின்றார்கள்? அல்லது இயல்பு நிலையை ஏற்றால் தமது குற்றங்கள் அம்பலமாகிவிடும் என்ற பயமா?

  தாயகத்தில் யுத்தம் நின்றுபோனாலும் தமது அன்றாடங்களுக்கு அல்லல்படும் சமுதாயம் ஒன்று உருவாகிவருவதை மறந்துவிட முடியாது. இதில் விடுதலைக்காகப் போராடி சில வருடங்களுக்கு முன்னர் எம்மால் “கொண்டாடப்பட்ட” முன்னாள் விடுதலைப் போராளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் அடங்குகின்றனர். தொழில்முறை பயிற்சியற்றவர்களான இவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய வழிமுறைகள் தெரியாமல் சமுதாய அனாதைகளாக மாறும் அவலம் நாளாந்தம் நிகழ்ந்து வருகின்றது. இன்னுமொரு பிரிவு வறுமையை போக்குவதற்கு விபச்சாரம் வரை தள்ளப்படும் உண்மையை மறைத்துக் கொண்டு எம்மை உயர்ந்த ஒரு சமுதாயமாக காட்டிக் கொண்டு எமது புலம்பெயர் வாழ்வு இங்கு தொடர்கின்றது.
  அன்றொரு நாள் நீதிக்காக குரலெழுப்பி நெடுந்தெருவை நிறைத்த கனடியத் தமிழன் விடுதலையின் பெயரால் சேகரிக்கப்பட்ட பணத்தை வெளியே கொண்டுவரும் வகையில் நிதிக்காக குரல் எழுப்ப வேண்டிய காலம் எப்போது தோன்றும்?

  இலங்கையில் தமிழனுக்கு நடந்த(இன்றும் நடக்கும்) அனைத்து துயரங்களுக்கும் இலங்கை அரசாங்கம் தான் காரணம் என விரல்காட்டிவிட்டு “அவர்களின்” பெயரால் புலம்பெயர்ந்த நாம் சுகவாழ்வு வாழமுடியும் என்ற பகல் கனவு யாருடைய திரைக்கதை?

  இலங்கை அரசாங்கத்தை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு ஜக்கிய நாடுகள் சபையை வழக்கறிஞராக நியமித்த நின்மதியில் (அல்லது பெருமையில்) நாம் எல்லோரும் தப்பிக்க நினைப்பதில் என்ன நியாயம்?

  விடுதலையின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்டு தற்போது தனிநபர் (அசையும் மற்றும் அசையாத) சொத்துக்களாக உள்ள பணம் அறக்கட்டளை ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு தாயகத்தில் யுத்தத்தினால் இன்றும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்காக செலவு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதா?

  பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இன்னும் எத்தனை காலத்தைதான் ஓட்டப்போகின்றோம்?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>