எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா (மணிமாலா)

 • ekuruvinight-date

  எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற ஒக்டோபர் மாதம் 16-10-2015 பாராட்டுவிழா ஒன்று ரொறன்ரோவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. இவ்விழாவில் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், தன்னார்வத் தொண்டருமான கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை கனடாவில் உள்ள பல தொடர்பு சாதனங்கள், மன்றங்கள், சங்கங்கள் என்பன ஒன்று சேர்ந்து கௌரவித்திருந்தன. இலக்கிய ஆர்வலர்களால் மண்டபம் நிறைந்திருந்தது அவரது சேவைக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது. ஊடகங்கள், மன்றங்கள் சார்பான உரையைத் தொடர்ந்து பேராசிரியர் சுப்ரமணியன் ஐயர், பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன், சிந்தனைப்பூக்கள் எஸ்.பத்மநாதன், நாடக நெறியாளர் என். சாந்திநாதன் ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன.

  இந்த பாராட்டு விழாவில் ‘கனடா தமிழர் இலக்கியம் – குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற 340 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றும் அப்போது வெளியிடப்பட்டது. திரு. தங்கராசா சிவபாலு அவர்கள் இந்த நூலை அறிமுகம் செய்து வைக்கும்போது, இது போன்ற ஆவண நூல் கனடியத் தமிழர் இலக்கியத்தில் இதுவரை வெளிவரவில்லை என்பதைக் குறிப்பிட்டார். தமிழக இலக்கிய இதழ்களான விகடன் தீபாவளி மலர், விகடன் பவளவிழா மலர், விகடன் காதலர்தின மலர், கல்கி போன்றவற்றில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் பற்றியும், கலைமகள் ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டி, உதயன் சிறுகதைப் போட்டியில் இவர் பெற்ற பரிசு பற்றியும், தமிழர் தகவல், தமிழ் மிரர் ஆகியன வழங்கிய இலக்கிய விருதுகள் பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டு, இத்தகைய விழா எடுப்பதற்குக் குரு அரவிந்தன் வாழும்போதே தகுதியானவர்தான் என்பதைச் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் சுட்டிக்காட்டினார். அன்றைய நிகழ்வின் போது, எழுத்தாளர் குரு அரவிந்தனின் இலக்கிய சேவையைப் பாராட்டிப் பலரும் மேடையில் உரையாற்றியிருந்தனர்.
  ‘புடம்போட்ட மானுடர்கள் என்று பார்த்தால், எல்லோரும் விரும்புகிற குருவே நீதான்
  இருக்கின்றாய் முதலிடத்தில் எழுத்தால் இங்கே!’
  என்று கவிஞர் இரா.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டதுபோல, அரங்கம் நிறைந்த குரு அரவிந்தனின் இந்தப் பாராட்டு விழா பலராலும் பாராட்டப்பட்டது. குரு அரவிந்தனின் குடும்பத்தின் சார்பாக ஆனந் அரவிந்தன், கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பாக செயலாளர் சிவநயனி முகுந்தன் ஆகியோரின் நன்றி உரையுடன் விழா இனிதே முடிவுற்றது. நீண்ட நாட்களின் பின் அதிக அளவில் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட சிறந்த விழாவாக இந்தப் பாராட்டு விழா அமைந்திருந்தது
  kurusilver-16oct2015-5

  Kuru-Ekuruvi-2015


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>