வைத்தியர் ஷாலினியின் கருத்தும் .. புலிக்காச்சல்களின் பக்கவாததியங்களும் ..

தமிழகத்தைச் சார்ந்த மனநல மருத்துவரான டாக்டர் ஷாலினி அவர்கள் கடந்த மாதம் டொரோண்டோவில் நிகழ்ந்த “நினைவுகள்” நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து , ஒரு சிலரை சந்தித்த பின்னர் , சென்னை திருப்பிய அவர் , டொராண்டோவில் தான் சந்தித்த ஈழத்தமிழ் மக்களில் சிலர், ‘ராஜிவ் காந்தியால் தான் தாங்கள் தற்போது உயிருடன் இருக்கிறோம் என்று நன்றிப் பெருக்குடன் கூறினார்களாம் என்றும் தலைவர் பிரபாகரனை விமர்சித்தும் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார் .
மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டது

கனடாவில் அவர் சந்தித்துப் பேசிய ஒரு சில ஈழத்தமிழ் மக்களது கருத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக வெளிபடுத்திய கருத்துக்கள் தொடர்பாக இக்கட்டுரை எழுதப்பட்டது .

பேசாப் பொருளைப் பேசுதலும் பேச வேண்டியவற்றை பேசாமல் தவிர்த்தலும் எமது சமூகத்தின் சாபமாகிப் போன காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

maxresdefaultஇந்தியாவில் இருந்து வருகை தந்த மலநல மருத்துவர் சாலினி அவர்கள் எமது விடுதலைப் போராட்டம் குறித்து பதிவு செய்த கருத்துக்கள் பல்வேறு தளங்களில் வேறுபட்ட அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டுள்ளது.

உண்மையில் சாலினியின் கருத்துக்களுக்கான முழுமைப் பொறுப்பும் அவரை மட்டுமே சாரவேண்டும். அவரை அழைத்தவர்கள் அவரோடு ஊர் சுற்றியவர்கள் உணவருந்தியவர்கள் என்று நீளும் பட்டியல்களின் ஊடாக நாம் உண்மை நிலைகளை புரிந்து கொள்ளாமல் தப்பிச் செல்ல முனைகின்றோம்.

விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் புலம்பெயர் தரப்புகளை இரண்டு பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

ekuruvi_night-2018தமிழீழ விடுதலைப் புலிகள் பலம்மிக்க அமைப்பாக இருந்த காலத்தில் கூட அவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த புலம்பெயர் தமிழர்களும், அமைப்புகளும் ஊடகங்களும் முதல் பிரிவு.

விடுதலைப் புலிகளின் அர்பணிப்புகளையும் வீரம் செறிந்த போராட்டங்களையும் அவர்களின் இருப்பின் அவசியத்தையும் தாண்டியதாக அவர்கள் மீதான கருத்தியல் விமர்சனங்களை அந்த குழுவினர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். தங்களை மாற்றுக் கருத்தாளர்களாக வெளிப்படுத்தி நிற்கும் இந்த பிரிவினர் தமது நிலைப்பாட்டை கால ஓழுங்குகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் இன்னமும் புலிக்காச்சலில் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மை.

விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாமல் போயுள்ள நிலையிலும் அது குறித்து உரையாடல்களையும் படைப்புகளையும் வெளிப்படுத்துவதன் ஊடாக தங்கள் இருப்பை அவர்கள் நிரூபிக்க முயன்று வருகின்றனர்.

அவர்களில் சிலர் தமக்குள்ள திறமைகளை போருக்கு பின்னரான நிலமைகள் குறித்து பேசுவதற்கும் மக்களின் தற்போதைய வாழ்வின் அவலங்களை பேசுவதற்கும் போதுமான அளவில் பயன்படுத்தாமல் புலிகள் என்ன செய்தார்கள் என்ற பரிசோதனையிலேயே தங்கள் காலங்களை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே வருத்தத்திற்குரியது.

மற்றைய பிரிவினர் இவர்களை விடவும் ஆபத்தானவர்கள்.2009 ற்கு பின்னரான சூழலில் உருவான புதிய புலி எதிர்பாளர்கள் இவர்கள். விடுதலைப் புலிகள் பலம் மிக்க அமைப்பாக இருந்த காலத்தில் அவர்களுக்கு துதிபாடித் திரிந்தவர்கள் 2009 ற்கு பின்னர் ஞானஸ்தானம் பெற்று தம்மை புனிதர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமர்சனங்களையும் அவர்களின் தியாகங்களை கொச்சபை;படுத்தும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அவர்களை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பகிர்வது என்பது அதிமேதாவிதனமானது என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்.
விடுதலைப் புலிகள் தவறானவர்கள் என்பதை நிறுவுவதன் மூலமாக தங்களை புனிதர்களாகவும் ஏனையவர்களை பாவிகளாகவும் மாற்றுவதே அவர்களின் எண்ணம்.

2009ற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கொடியை பிடிக்க மறுப்பவர்களை துரோகிகள் என்று கூறியவர்கள் தான் இப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் கடுமையாக விமர்சிக்கும் விசமத்தை புரிகின்றார்கள்.

வெற்றி பெறும்; குதிரையில் பந்தயம் கட்டும் மனவியாதி கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு துதிபாடுவதற்கும் அவர்களை அழைத்து விருந்துபசாரம் செய்வதற்கும் “விடுதலைப் புலிகள்” உடனான அவர்களின் முன்னாள் தொடர்புகள் தடையாக இருந்து விடும் என்பதால் பொது வெளியில் விடுதலைப் புலிகளை தவறாக சித்தரித்து திரிகின்றார்கள்.

பெரும்பாலான தமிழர்களுக்கு இருப்பதாக  நம்பப்படும் மறதி நோயினால் 2009ற்கு முன்னர் அவர்கள் போட்டிருந்த புலி வேசத்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்றும் இப்போது அவர்கள் போட்டிருக்கும் நரிவேசத்திற்கு மக்கள் பழகிவிட்டார்கள் என்பதும் அவர்களின் கருத்து.

இவ்வாறானவர்களின் கருத்துக்களின் பின்னால் உள்ள அரசியலையும்; அது ஏற்படுத்தும் தாக்கங்களின் வீச்சையும்  புரிந்து கொண்டவர்கள் அதனை அவர்கள் பாணியில் கடந்து சென்று கொண்டே இருப்பார்கள்.

இந்த பின்னணிகளோடு தான் நாம் தமிழகத்தில் உள்ள சாலினி போன்றவர்களின் கருத்துக்களையும் அதற்கு பின்னால் உள்ள காரணிகளையும் நாம் கருத வேண்டும்.

ஈழத் தமிழர்களின் வலிகளை உணர்ந்த தமிழ் உணர்வாளர்களை தமிழகத்தின் ஏழுகோடி தமிழர்களில் இருந்து தரம்பிரித்து அறிய வேண்டியதும் அவர்கள் மூலமாக தமிழகத்தில் வாழும் மக்களுக்கு எமது வலிகளை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டியதும் எமது முக்கியமான கடமை.

ஒரு சிலர் விடுகின்ற தவறுகளுக்காக ஓட்டு மொத்தமாக தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் தமிழகத்தில் இருந்து எவரையும் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் கூக்குரலிடுவது புத்திசாலித்தனமானதல்ல.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழகத்தை பின்தொடரும் சமூகமாக தான் இருக்கின்றோம். இது கசப்பானதாக இருந்தாலும் அது தான் உண்மை.
எங்கள் பொழுது போக்குகளில் பெரும்பாலனவற்றை தமிழக திரைப்படங்களும் சின்னத் திரைகளும் இலக்கியங்களும் தானே நிறைக்கின்றன.

எங்கட பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும்; நிகழ்வுகளுக்கு எத்தனை பேர் போகின்றோம் , ஏ.ஆர் ரஹ்மான் , இளையராஜா இசை நிகழ்சிக்கு எத்தனை பேர் போகின்றோம்.

எமது பண்பாட்டு நிகழ்வுகளுக்கு நாம் அணிந்து செல்லும் நவீன ஆடை அணிகலன்கள் எங்கிருந்து தருவிக்கப்படுகின்றன. அவற்றை எவ்வாறு நுகர்வுச் சந்தையில் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தமிழகத்தில் எமக்கு ஆதரவான சக்திகளை பலப்படுத்துவதும் அவர்கள் மூலமாக எமது ஆதரவுத் தளத்தை அங்கு விரிவுபடுத்துவதும் மிகவும் முக்கியமானது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலம் முதல் தமிழகம் எமக்கான ஆதரவுத் தளமாக இருந்து வந்ததையும் எமக்கான தீர்வுகளையும் நியாயத்தையும் பெறுவதற்கு அதே தமிழக மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

ஒரு சில மாற்றுக் கருத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டிற்காக தமிழகத்தை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று கருத்துரைப்பதும் அதனை நோக்கியதான குரலை எழுப்புவதும் மிகவும் ஆபத்தானது.

தமிழக மீனவர்கள் பிரச்சினையை ஈழத் தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சினையாக ஊதிப் பெரிதாக்கி ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுத் தளததை தமிழகத்தில் இல்லாதொழிப்பதற்கு இந்திய மத்திய அரசும் இலங்கை அரசாங்கமும் மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் மாற்றுக் கருத்தளார்களுடன் திறந்த உரையாடல்களை நடத்துவதன் மூலம் அவர்களின் நிலைப்பாடுகளை மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

எமது மக்களின் வலிகளை அவர்களுக்கு புரியவைப்பதன் ஊடாக அவர்களை எமக்கு சார்பானவர்களாக மாற்றுவதே காலத்தின் தேவையாக உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வகிபாகம் எவராலும் மறைக்கப்பட முடியாதது என்பதையும் அவர்களின் தியாகங்களை ஒரு சிலரின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒப்பாரிகளை மட்டும் கருத்தில் கொண்டு மறுத்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியது புலம் பெயர் தமிழர்களின் கடமை.

குறிப்பாக சர்சைக்குரிய கருத்துக்களுக்கு எப்போதும் வீரியம் அதிகம் என்பதயே மருத்துவர் சாலினி அண்மையில் கனேடிய விஜயம் குறித்தும் தனது அவதானிப்புகள் குறித்தும் தனது முகநூலில் பதிவேற்றிய விடயங்கள் எமக்கு எடுத்துச் சொல்கின்றன.

தமிழகத்தில் இருந்து கல்வியாளர்கள்  இய்கை விவசாயிகள் என 20ற்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்று தாயகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கான கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டல் செயலரங்குகளை புதிய வெளிச்சத்தின் ஊடாக நடத்திய போது பூரண அமைதி காத்த தமிழ்  தேசியவாதிகளும் புரட்சியாளர்களும் மருத்துவர் சாலினியின் கருத்தில் உயிர்த் தெழுந்திருக்கின்றார்கள்.

தவாறான விடயம் ஒன்று வரும் போது வரிசை கட்டி வருபவர்களில் பெரும்பாலனவர்கள் ஏன் புதிய வெளிச்சம் போன்ற நல்ல விடயங்கள் நடக்கும் போது பேச்சு மூச்சின்றி எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

தமிழ் தேசியத்தை தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது போலவும் மருத்துவர் சாலினியின் கருத்தினால் தமக்கு மாரடைப்பு வந்து விட்டது போலவும் சமூக வெளியில் பொங்கிய பலரிடம் வெளிப்பட்டது சந்தரப்பவாதம் மட்டும் தான்.

இது போன்ற சர்சைகளில் தம்மை ஈடுபடுத்துவதன் மூலமும் அதற்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலமும் மின்னும் புகழ் வெளிச்சத்தை பெற்றுவிட துடிக்கும் சுயநலன்களே இவர்களில் மேலோங்கி நிற்கின்றது.

மருத்துவர் சாலினி; வெளிப்படுத்திய  கருத்துக்கள் மிகத் தவறானவை என்பதிலும் அவை ஆபத்தான எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதிலும் எந்தவிதமான மாற்று கருத்துக்களும் கிடையாது ஆனால் அவரின் கருத்துக்களை எதிர்ப்பதாக கூறியவாறு எழுந்து வந்த சில புரட்சியாளர்கள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

தமக்கான புகழ் வெளிச்சம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கி வரும்  அவர்கள் குட்டைளை குழப்பி அதில் மீன் பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். அவ்வாறானவர்களை ஊக்கப்படுத்துவதும் அவர்களின் பிரசார உத்திகளுக்குள்ள சிக்கிக் கொள்வதும் மிகவும் ஆபத்தானது.

மனநல மருத்துவர் சாலினி அவர்களின் கருத்துக்களுக்கான பின்னணி குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அவரின் கருத்துக்கள் ஏற்டுத்தும் தாக்கங்களின் பாதிப்புகளை அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் தெளிவு படுத்த வேண்டும்.

அவர் வெளிப்படுத்திய கருத்துக்களை அவர் மீளப் பெறுவதும் பெறாமல் விடுவதும் அவர் தனிநலன் சார்ந்த ஒன்று.

அவர் பதிவேற்றிய கருத்துக்களை அவர் தனது முகப்புத்தகத்தில் இருந்து நீக்கியதன் மூலமாக தவறு சரிசெய்யப்பட்டு விட்டதன்று யாரும் கருதிவிட முடியாது.

விடுதலைப் புலிகள் தொடர்பிலும் எமது விடுதலைப் போரின் இந்தியாவின் தாக்கங்கள் குறித்தும் பெரும்பாலான தமிழர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் தான் சந்தித்த ஒரு சிலரின் கருத்துக்களை மட்டும் கவனத்தில் கொண்டு அது தான் ஒட்டு மொத்த புலம்பெயர் சமூகத்தினதும் நிலைப்பாடு என்ற தொனியில் கருத்துக்களை வெளிப்படுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அதேபோல் அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் தனது விஜயம் குறித்தும் தனது அவதானிப்புகள் குறித்தும் அவர்  வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே பொறுப்புடையவர்கள் என்று நடைபெற்ற தவறை திசை திருப்ப முற்படுவதும் ஏற்புடையதல்ல.

மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் போது அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் கடந்த காலங்களில் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் என்பவற்றை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கருத்தில் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சர்சை எமக்கு உணர்த்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் ஒரு நாட்டின் புரட்சியை உண்டு பண்ணக் கூடியளவிற்கு வளர்ச்சி பெற்று நிற்கும் சூழலில் ஒரு முகப்புத்தகக் கருத்திற்கு இத்தனை அக்கப் போரா என்று அதனை கடந்து சென்று விட முடியாது.

அதிலும் தமிழ் நாட்டின் பல்வேறு தளங்களிலும் இயங்கி கொண்டிருக்கும் மருத்துவர் சாலினி போன்றவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சாதாரண தமிழ் மக்களால் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பதும் அது ஈழத் தமிழ் மக்கள் மீதான அவர்களின் கரிசனைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் நாம் தீவிரமாக ஆராயவேண்டும்.

கருத்தியல் தளங்களில் ஆராயப்பட வேண்டிய விடயங்களை காழ்புகளின் அடிப்படையில் அணுகுவதன் ஊடாக நாம் இயங்க வேண்டிய சரியான தளங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அரத்தமற்ற கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்வது ஆரோக்கியமற்றது.

மருத்துவர் சாலினி அவர்களின் கருத்துக்களோடு ஏன் உடன்பட முடியாது என்பதை புலம்பெயர் செயற்பாட்டளார்கள் சிலர் மிகக் கவனமாக பதிவு செய்திருக்கின்றார்கள் ஆனால் அவர் அந்த பதிவை முற்றிலுமாக நீக்கியதன் மூலம் அந்த உரையாடல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் மட்டுமே வாசகர்களை சென்றடையும் நிலையினையும் அவருக்கான எதிர்வினைகளை வாசகர்கள் அறிந்து கொள்ள முடியாத அவலத்தையும் ஏற்படுத்தி விட்டுள்ளது.

இனியாவது இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதை நிகழ்வுகளை நடத்துபவர்கள் கருத்தில் கொள்வார்கள் என்று நம்புவோமாக.


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *