முதல்வராக Doug Ford பதவியேற்ற ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், Ontario மாகாணத்தை எங்கே கூட்டிச் செல்கிறது ?

முதல்வராக Doug Ford பதவியேற்ற ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், Ontario மாகாணத்தை எங்கே கூட்டிச் செல்கிறது ?

தர்ஷினி உதயராஜா

15 வருடங்களுக்குப் பின்பு Ontario மாகாணத்தை நிர்வகிக்க PC கட்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  இதன் 26ஆவது முதல்வராக 53 வயது Doug Ford அவர்கள்  Jun 29, 2018இல் பதவியேற்றுக் கொண் டார். இதன் பின்பு, கடந்த ஒரு மாதத்தில் மாகாணத்தில்  ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது பற்றி அலசுவதே இந்த கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

புதிய அமைச்சரவையில் 21 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் Doug Ford அவர்கள் தன்னுடன் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்ட Christine Elliottஐ துணை முதல்வர் மற்றும் சுகாதார, நீண்ட கால பராமரிப்புத் துறை அமைச்சராகவும், Caroline Mulroneyஐ  அரச வழக்கறிஞர் மற்றும் பிரெஞ்சு மொழி அலுவல்கள் அமைச்சராகவும் நியமித்துள்ளார். முதியோர் நல அமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட 81 வயதான Raymond Cho தவிர்ந்த ஏனையோர், பல் கலாச்சார மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இல்லை என்றும், 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெறுகின்றமையும்  சுட்டிக்காட்டப்படுகிறது.

அமைச்சரவை குறைக்கப்பட்டதன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை சிலர் வகிக்கவேண்டியிருக்கும். உதாரணமாக சக்தி துறை அமைச்சர் Greg Rickford, வடபகுதி வளர்ச்சித் திட்டங்கள் , சுரங்க தொழில்துறை, பூர்வகுடிகள் விவகாரம் அனைத்தையும் கவனிக்கவேண்டியவராகிறார். இதனால் முன்னைய அரசின்கீழ் குற்றஞ் சுமத்தப்பட்ட Hydro One விவகாரத்தை கையாள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். அத்துடன், காலநிலை மாற்றம், குடிவரவு, இனப்பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள், ஆராய்ச்சி, புத்தாக்கம், விஞ்ஞானம் தொடர்பில் எந்த அமைச்சு பதவிகளும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுUntitled-9

PC கட்சி பதவியேற்றது முதல் இதுவரையான மாற்றங்களை திகதி வாரியாகக் கவனிக்கலாம்:

June 30 – தனியார் மருந்து திட்டம் (Private Drug Plan) உள்ள 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு  – மாகாணத்தின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை (OHIP +)  இல்லாமல் செய்தல்.

கடந்த லிபரல் அரசால் இந்த திட்டத்தின் கீழ், வைத்தியரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (Prescriptions) இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தை ரத்து செய்ததன் மூலம், காப்புறுதி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தும் பெரும் தொகை பணம் மீதப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

மறுபுறத்தில், தனியார் திட்டங்களுக்கு செலுத்தும் மாதக்கட்டணம் (premium), பாவனைக் கட்டணம் (user fee), பயனாளருக்கான மேலதிக கட்டணம் (co-payment) என்பன அதிகரிக்கும். அத்துடன், பெரும்பாலும் இந்த திட்டங்களின் கீழ் மருந்து பெறும் ஒருவர், deductible அல்லது co-paymentன் 20%தை செலுத்தவேண்டி ஏற்படுகிறது.

புற்றுநோய் உட்பட கடுமையான நோய் ஏற்படுமிடத்து, பல ஆயிரம் செலவு ஏற்பட்டால், பல நூறுகளை ஒரு குடும்பம் செலவு செய்யவேண்டி ஏற்படும். அத்துடன் கருத்தடை, பாலியல் நோய், மாற்று பாலின தெரிவுகளை மேற்கொண்டவர்களுக்கான மருந்துகள் மற்றும்  துஷ்பிரயோகமான முறையில் நடக்கும் பெற்றோர் மூலமாகவும் மருந்துகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

July 03 – பொது சேவை முகாமையாளர்களுக்கான சம்பளம் உறை நிலையில் வைக்கப்பட்டது. அத்துடன் நிர்வாக மற்றும் மேலாண்மை இழப்பீட்டுத் தொகைகள் மீளாய்வு செய்யப்படும் என்றும்  காவல்துறை முதலான அத்தியாவசிய முன்னணி பணியாளர் தவிர்ந்த ஏனையவர்கள் புதிதாக பொதுசேவையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சேவைகளைப் பெற காத்திருப்பு நேரம் அதிகரிக்கும். புதிதாக கல்வியை முடித்து வெளியேறும் பட்டதாரிகளுக்கான பொது சேவை வேலைவாய்ப்பு தடுக்கப்படுகிறது.

Cap and Trade திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இதன்மூலம் பயனடைந்த பல திட்டங்கள் கைவிடப்பட்டன. இதன் ஏலத்தின் மூலம் கடந்த வருடம் 3 billion வருமானம் பெறப்பட்டது.

 1. இந்த வருடத்துக்கான பாடசாலை புனரமைப்புக்கான 100 million நிதி ரத்து. ஏற்கனவே, 4900 பொது பள்ளிகள் 15 பில்லியன் வரையான திருத்த வேலைகள் செய்யப்பட காத்திருக்கின்றன. (July 9, 2018)
 2. தற்போது சமூக வீடுகளுக்கான புனரமைப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு வழங்க இருந்த 300 million பணத்தின் 129 million மட்டுமே வழங்கப்படும்.

III. TTC/GO-Transit co-fare discount ரத்து – இதுவரை Go Transit / UP Express இல் பயணம் செய்தவர்கள், TTC இல் பயணம் செய்ய, அரைவாசி கட்டணமே அறவிடப்பட்டது.

 1. இதுவரை வீடுகளில் சக்தி சேமிப்பை ஊக்கப்படுத்த யன்னல் Solar, thermostat, Heat pumpsகளைப் பொருத்த பகுதியளவாக பணம் வழங்கப்பட்டுவந்தது.
 2. இதுவரை வாகனங்களுக்கு காலத்துக்கு காலம் செய்யும் emission testக்கு பணம் அறவிடப்படுவதில்லை.
 3. அத்துடன் ஒருவர் தமது பாவனை நேரத்தை மாற்றுவதன் மூலம் (time of use) கட்டணத்தை குறைக்கக் கூடியதாக இருந்தது.

VII. சரியான பாவனை கட்டணத்தை தீர்மானிக்க புதிய திறன் கூடிய smart metreகள் பொருத்தப்பட்டு வந்தன. இவை அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.

July 04 – கடந்த லிபரல் அரசு அங்கீகரித்த கீழ்வரும் சட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 1. புகையிலை தவிர்ந்த ஏனையவற்றை புகைத்தல் (vaping e-cigarettes) தொடர்பாக மாற்றப்பட்ட சட்டங்கள் நிறுத்தம்
 1. விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகளுக்கான சீட்டுக்களின் முகப் பெறுமதியின் அரை பங்கிலும் அதிகமாக – மீள விற்பனை செய்தலை நிறுத்தல்

 

 1. சட்ட அமுலாக்கத்தை மேற்பார்வையிடுதல் மற்றும் காவல்துறையின்  கடமைகளை மீட்டெடுத்தல்  தொடர்பான சட்டங்கள் நிறுத்தம்
 1. காவல் துறையை கண்காணிக்கும் 3 பிரதான – Inspector General, Ombudsman, Special Investigations Unit இவர்களினால் விசாரணை செய்யப்படக்கூடிய மற்றும் மேலதிக பொறுப்பு கூறல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.

காவல்துறையினால் பொதுமக்கள் சுடப்பட்டு இறக்கும், காயப்படுத்தப்படும், வன்முறையாக நடத்தப்படும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனைக் கண்காணிப்பவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

 1. வைத்தியர்கள் தடுப்பூசி தொடர்பான அறிக்கைகளை சமர்பித்தலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. – பிள்ளைகளின் நலனை விடவும் வைத்தியர்களின் மேலதிக வேலைப்பளு இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது

July 5 – கனடிய பிரதமர் Justin Trudeauவும் மாகாண முதல்வர் Doug Fordஉம் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர். இதன் போது, கனடிய சமஷ்டி அரசு சட்டவிரோதமாக எல்லை கடந்து கனடாவுக்குள் வருபவர்களை ஊக்குவிக்கிறது. இதனால் Ontarioஇல் உள்ளவர்கள் மீது சுமை அதிகமாகிறது என்று Ford தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த கனடிய பிரதமர், கனடிய குடிவரவு சட்டம் பற்றிய பூரண விளக்கத்தை Ford கொண்டிருக்கவில்லை, எல்லை கடந்து கனடா வரும் புகலிடக்கோரிக்கையாளர்களையும், கனடாவில் குடியேற விரும்பி அதற்காக விண்ணப்பித்து வரும் குடிவரவாளர்களையும் இரு வேறு விதங்களில் கனடா கையாள்வதாகவும், அகதிகோரிக்கையாளர்கள் தொடர்பாக கனடாவுக்கு உள்ள கடப்பாடு தொடர்பிலும் விளக்கியிருந்தார்.

குடிவரவாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கனடாவில், அவர்களின் பங்களிப்பை மறந்து, அகதிகளுக்கெதிரான மனநிலை கொண்ட ஒருவராக Ford தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பது இங்கு நோக்கத்தக்கது.

July 11 –  Hydro One CEO, Mayo Schmidt மற்றும் குழு உறுப்பினர்கள் பணி நீக்கம்.

கடந்த வருடம், $ 6.2million சம்பளமாக பெற்ற Schmidt, குழு உறுப்பினர்களால் பதவி விலக்கப்படுமிடத்து $10.7 million (severance) கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் $400,000 மொத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் பதவி விலகியமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதில் பாவனையாளர் CEOக்கான சம்பளத்தின் 2 சதங்களை மட்டுமே தமது மாதக் கட்டணத்தில் இருந்து செலுத்த, மிகுதி பங்குதாரர்கள் மூலமாகவே வழங்கப்பகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்டாரியோவின் முன்னைய ஆட்சியில் பதவி வகித்த  தலைமை முதலீட்டு அதிகாரி O’Dette, தலைமை விஞ்ஞானி Molly Shoichet, வணிக ஆலோசகர் Ed Clarke பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் ஏன் நீக்கப்பட்டனர் ? பதிலாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் யார் ? கொடுப்பனவுகள் பற்றி தெளிவில்லை.  விஞ்ஞான அமைச்சகத்தை இல்லாமல் செய்தால் விஞ்ஞான ஆய்வுகள் தொடர்பான பெறுமதி அற்றுப்போயுள்ளது.

சுகாதார நல ஆலோசகராக Dr. Rueben Devlin நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான கொடுப்பனவு – $348,000/வருடம் + paid expense. இந்த நியமனத்துக்கான காரணம், சகோதரர் Rob Ford அனுமதிக்கப்பட்ட Humber River  மருத்துவமனையில் தலைவர் மற்றும் CEOவாக இருந்த Devlin செய்த சிறப்பான சேவைக்காகவும், தேர்தல் பிரச்சார காலத்தில் மூத்த ஆலோசகராக செயல்பட்டமைக்காகவும், தனது குடும்ப நண்பரை இந்த பதவிக்கு Ford தெரிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

Mike Harris ஆட்சி காலத்தில் கட்சியின் தலைவராக இருந்த Devlin மருத்துவ செலவினங்களை பெருமளவு குறைத்ததினால் சேவை குறைப்பு ஏற்பட்டு மக்கள் அவதியுற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் முன்னைய மாகாண முதல்வருக்கான சம்பளம் $209,000/வருடம் ஆகவே இருந்தது.

July 12 – Doug Ford தனது சிம்மாசன உரையின் போது, பல அறிவிப்புகளை வெளியிட்டார்.  கார்பன் வரியை நீக்குவது மின்சார கட்டணத்தை குறைப்பது உட்பட பல வாக்குறுதிகளும் மீண்டும் வழங்கப்பட்டன.

பியர், வைன் என்பவை  மளிகை கடை, Convenience Store என்பவற்றில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி 9.15%இல் இருந்து7.32%ஆக குறைக்கப்படும். ஆனால். இது 2020-2021லேயே நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

20 வருடங்கள் பிற்படுத்தப்பட்ட பாலியல் பாடத்திட்ட மாற்றம் (சில சேர்க்கைகளுடன்)  இணைய, சமூக வலைதள பாவனை, துஷ்பிரயோகங்கள், தொந்தரவுகள் அதிகரித்துள்ள நிலையிலும்,  ஒரே பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்ட பின்பு, பிள்ளைகள் தம்மை தற்காத்துக்கொள்ளக்கூடிய வகையிலாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டமே மாற்றப்படுகிறது.

July 16 – சூழலை பாதுகாக்கும் வகையிலான காற்றாலைத்திட்டம் முடியும் தறுவாயில் ரத்து செய்யப்படுகிறது.

கிழக்கு ஒண்டாரியோ, Prince Edward County இல் 2010களில் தொடங்கப்பட்ட White Pines Wind Project – 3005 வரையான வீடுகளுக்கு மின்சாரம் வழங்க, 9 காற்றாலைகளுடன்  நிர்மாணிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட காத்திருந்தது.  இதனை கடைசி நேரத்தில் ரத்து செய்வதால் ஏற்படும் செலவு 100 மில்லியன் ஆகும்.

யாருடனும் கலந்தாலோசிக்கப்படாமல் ரத்து செய்வதால் அரசுகளின் மீது ஏற்படும் நம்பிக்கையீனம்,  சட்ட நடவடிக்கை, தண்டப்பணம், நிர்மாண மற்றும் இதர செலவீனம் என்பவற்றுக்கு யார் பொறுப்பு ?

ஆனால் Pickering இல் இயங்கி வரும் அணு மின் உற்பத்தி நிலையத்தை 2024ம் ஆண்டு வரை இயங்க அனுமதிக்கப்போவதாக Ford கூறியுள்ளார்.

இதில் பெறப்படும் மின்சாரத்துக்கு 2cents/kwhr என்ற அடிப்படையில் அமெரிக்காவின் Michigan மாநிலத்துக்கு அனுப்பி விட்டு, Ontario Power Generation இடம் 9cents/kwhrக்கு கொள்வனவு செய்கிறோம். அத்துடன் அணு மின் உற்பத்தியினால் சூழல் மாசடைகிறது. சூழல் மாசை குறைக்கும் விதத்தில் உற்பத்தியை மேற்கொள்ள அதிகம் செலவாகிறது. மின்சார பற்றாக்குறை ஏற்படாதிருக்கவும் 7500 தொழில்களை பாதுகாக்கவும் எனக்கூறி லிபரல் அரசால் 2024வரை திறந்திருக்க முடிவு செய்யப்பட்டது. இப்போது அதனையே இந்த அரசு மீளவும் உறுதி செய்துள்ளது.

July 18 – சமஷ்டி காலநிலை அமைச்சர் Catherine McKenna காலநிலை தொடர்பாக Ontario மாகாணம் எந்த திட்டத்தையும் கொண்டிராதது தொடர்பில் ஏமாற்றம் வெளியிட்டார். சமஷ்டி அரசினால் அமுல்படுத்தப்பட இருக்கும் கார்பன் வரியை செலுத்தாது, அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று விலக்குப் பெற Ford விரும்புகிறார். இது சாத்தியம்தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
July 24 – கடந்த லிபரல் அரசால் மனநலன் தொடர்பான ஆரோக்கியத்துக்கு நான்கு வருடங்களில் $2.1 billion செலவுசெய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனை ரத்துச் செய்துள்ள அரசு, அடுத்த பத்தாண்டுகளில் செலவு செய்ய தீர்மானிக்கப்பட்ட $1.9 billion இல் பகுதியளவு, காவல்துறையில்  முதல் பதிலளிப்பவர்கள் எவ்வாறு மனநல பிரச்சினைகளை கையாள்வது , பெரிதாகாமல் தடுப்பதற்கான பயிற்சிகளை வழங்க பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.   மனநல ஆலோசனைகள், பணியாளர்கள் அதிகளவு தேவைப்படும் சூழ்நிலையில் அதற்கான நிதி மிகக்குறைவாகவே செலவு செய்யப்படும் என்பதைக் கவனிக்கலாம். அண்மையில் Danforthஇல் (Jul 22) மன நல பிரச்சனையில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட Faisal Hussain நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்து 13 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Jul 25 – Oct 17இல் பொழுதுபோக்கு கஞ்சாப் பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டபின்பு, அரசால் நிர்வகிக்கப்படும் LCBO இன் கட்டுப்பாட்டுக்குள் கஞ்சா நிறுவனமும் இயங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தனியாரும் கஞ்சா விற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுபாடு அற்ற விதத்தில் விற்பனை மேற்கொள்ளப்பட்டு குற்றச்செயல்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.

July 27 – கடந்தமுறை லிபரல் அரசால் உருவாக்கப்பட்ட Peel, York, Niagara, Muskoka பிராந்திய தலைவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நிறுத்தி வைப்பதாகவும், Oct 22ம் திகதி இடம்பெற இருக்கும் நகரசபை தேர்தலுக்கு முன்பாக, Toronto நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இருப்பதாகவும் Doug Ford அறிவித்துள்ளார்.

4 வருடங்கள்  கலந்தாலோசிக்கப்பட்டு மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி தற்போது 44 ஆக உள்ள தொகுதிகள் – அடுத்த தேர்தலுக்கு  47ஆக உயர்த்தப்பட்டன. அவை மீண்டும் 25ஆக சுருக்கப்படுவது, மக்களின் ஆணையை புறக்கணிப்பதாகும். எல்லைகள் விரிவாக்கப்படும் போது, கூடிய தொகை மக்களுக்கான சேவையை சரிவர கவனிக்கமுடியாது போகலாம் என்றும், இதன் மூலம் பெருமளவு பணம் சேமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றுக்கான காரணம், 2014 Toronto நகரசபை தேர்தலில் தன்னை தோற்கடித்த John Tory மற்றும் பிராந்திய தலைமைக்கு போட்டியிட இருந்த தனது அரசியல் போட்டியாளர் Patrick Brown இருவரின் மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பலர் இந்த முடிவுகளுக்கு தமது கண்டனத்தை தெரிவித்தாலும், பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் $25.5 million மீதப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாற்றங்களின் உண்மையான பலன்களை, அடுத்தடுத்த ஆண்டுகளில் அனுபவிக்க நாங்கள்  தயாராவோம் !  நல்ல மாற்றங்களை வரவேற்கும் அதே நேரம், மாகாணத்துக்கு நன்மை தராதவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

தர்ஷினி உதயராஜா


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *