டி.டி.வி.தினகரன்-எடப்பாடி பழனிசாமி பலப்பரீட்சைக்கு ‘கெடு’ நெருங்குகிறது

dinakaran_edapadiஅ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் உள்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்க உள்ளது. ஆகஸ்டு 5-ந்தேதி முதல் கட்சி அலுவலகத்திற்கு வந்து கட்சி பணிகளை டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள உள்ளார்.
இதனால் கட்சி பணிகளை யார் தலைமை தாங்கி, அறிக்கைகளை வெளியிடுவது என்பது தொடர்பாக டி.டி.வி. தினகரன்-எடப்பாடி பழனிசாமி இடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா), ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என 2 அணியாக அ.தி.மு.க. உடைந்தது. இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவரால் கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறை சென்ற பிறகு, அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
சசிகலாவால் முதல்-அமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. (அம்மா) அணியை ஏற்று நடத்த தொடங்கினார். அ.தி.மு.க. (அம்மா) சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே வெளிவர தொடங்கியது.
இதற்கிடையே, வழக்கில் ஜாமீன் பெற்று, சென்னை திரும்பிய டி.டி.வி.தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார். அவருக்கு தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்பட 34 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவரால் கட்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தன்னுடைய அணிக்குள்ளே தனக்கு எதிர்ப்பு உருவாகி கொண்டதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ‘அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்காக 60 நாட்கள் காத்திருப்பேன். அதன் பிறகு தீவிரமாக கட்சி பணியில் ஈடுபடுவேன். அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து என்னை யாரும் விலக்க முடியாது’ என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் மாறி மாறி வார்த்தை போர்களில் ஈடுபட்டனர். நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தமான செய்திகள் புறக்கணிக்கப்பட்டது. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் சம்பந்தமான செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் உள்கட்சி விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. நடிகர் கமல்ஹாசன் பிரச்சினையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் விமர்சனம் செய்தபோது, கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியமாக பதில் அளித்து இருக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்தநிலையில் வரும் ஆகஸ்டு 5-ந்தேதியுடன் டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வைத்த கெடு முடிகிறது. 5-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து, கட்சி பணிகளை டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள இருக்கிறார்.
அவரின் இந்த முயற்சியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநாளில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என்ற முறையிலும், முதல்-அமைச்சர் என்ற முறையிலும் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரனுடன் பலப்பரீட்சைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
5-ந்தேதிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அ.தி.மு.க. (அம்மா) அணி உள்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.
5-ந்தேதியில் இருந்து கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் எடப்பாடி பழனிசாமி பெயரில் வருமா? அல்லது டி.டி.வி. தினகரன் பெயரில் வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கட்சி அலுவலகத்திற்கு டி.டி.வி. தினகரன் வருவது குறித்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்காக டி.டி.வி.தினகரன் கால அவகாசம் கொடுத்து இருந்தார். அவர் அறிவித்த 60 நாள் கெடு விரைவில் முடிய உள்ளது. எனவே ஆகஸ்டு 5-ந்தேதி தலைமைக் கழகத்துக்கு வந்து மீண்டும் கட்சி பணியில் தீவிரம் காட்டுவார். அது மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சித் தொண்டர்களை சந்திக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களிலும் பேசுவார். aஇவ்வாறு அவர்கள் கூறினார்.

Related News

 • சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு
 • கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு
 • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
 • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *