இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் – டி.டி.வி. தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை

Facebook Cover V02

dinakaran_courtஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற, அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த 17-ந் தேதி கைது செய்து விசாரித்த போது, இரட்டை இலை சின்னத்தை பெற டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசிய தகவல் தெரியவந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பணம், 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் ஆகியோர் கடந்த 19-ந் தேதி சென்னை வந்து டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து, விசாரணைக்காக சனிக்கிழமை (நேற்று) நேரில் ஆஜராகுமாறு கோரி சம்மன் வழங்கினார்கள்.

அதை ஏற்று, விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் விமானம் மூலம் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் சென்ற விமானம் மதியம் 12.15 மணிக்கு டெல்லி போய்ச் சேர்ந்தது. அவரை அழைத்துச் செல்வதற்காக டெல்லி போலீசார் விமான நிலையத்துக்கு வந்து இருந்தனர். 12.30 மணிக்கு டி.டி.வி.தினகரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், போலீஸ் விசாரணைக்காக டெல்லி வந்து இருப்பதாகவும், சுகேஷ் சந்திரசேகரை தனக்கு தெரியாது என்றும், அவருடன் அறிமுகம் கிடையாது என்றும் கூறினார்.

பின்னர் போலீசார் அவரை அங்கிருந்து சாணக்கியபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு டி.டி.வி.தினகரனை தனி அறையில் வைத்து உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், துணை கமிஷனர் மதுர் வர்மா, இன்ஸ்பெக்டர்கள் நரேந்திர ஷாகல், ரித்தேஷ் சிங் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். சுகேஷ் சந்திரசேகருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு, பண பரிமாற்றம், தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகள் யாருடனாவது தொடர்பு வைத்து இருந்தாரா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு 7 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நடைபெற்றது. அப்போது டி.டி.வி.தினகரனுடன் அவரது வக்கீல்கள் யாரும் இருக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

விசாரணையின் போது, டி.டி.வி.தினகரனின் செல்போனை அதிகாரிகள் வாங்கி வைத்துக்கொண்டனர். அந்த செல்போனுக்கு வந்த அழைப்புகள், குறுந்தகவல்கள், அதில் இருந்து பேசப்பட்ட அழைப்புகள், ‘வாட்ஸ்அப்’ தகவல்கள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விசாரணை முடிந்ததும் டி.டி.வி.தினகரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனவே அவர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார்.

டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடந்த போது, அவரது உதவியாளர் ஜனார்த்தனனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை வேறொரு அறையில் போலீஸ் அதிகாரிகள் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இதேபோல் டி.டி.வி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா என்பவரிடமும் போலீஸ் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினார்கள். அவர்களும் விசாரணை முடிந்ததும் புறப்பட்டு சென்றனர்.

டி.டி.வி.தினகரனின் வருகையையொட்டி டெல்லி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அவரிடம் விசாரணை நடைபெற்ற குற்றப்பிரிவு அலுவலக வளாகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். உரிய அடையாள அட்டை இல்லாத யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

Share This Post

Post Comment