டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை

ekuruvi-aiya8-X3

dengu_2172203fதமிழகத்தில் டெங்கு மற்றும் இதர தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, உரிய தொடர்புடைய துறைகளுடன் இணைந்து, டெங்கு காய்ச்சலை மற்றும் இதர வகையான காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்களை பரவாமல் கட்டுப்படுத்தவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மக்கள் மனதில் பீதியை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றனர். எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டாலே இறப்பு நேரிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்கத் தவறிய அசாதாரண ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான நிகழ்வுகளில் மட்டுமே உயிரழப்பு நேரிட வாய்ப்புள்ளது. அதனையும் முற்றிலுமாக தடுத்திட அரசு எண்ணற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

டெங்கு காய்ச்சலை மருந்து மாத்திரைகள் மற்றும் Fluid Management மூலமாக மிக எளிதில் குணப்படுத்த இயலும். டெங்கு காய்ச்சல் “ஏடிஸ்” வகை கொசுவினால் பரப்பப்படுகிறது. இந்த வகை கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் கொசுவாகும். பகல் பொழுதில் கடிக்கும் குணமுடையது. எனவே பொதுமக்கள் வீடு மற்றும் வீட்டிற்கு அருகாமையில் தண்ணீரை தேக்கி வைத்துள்ள இடங்களை கொசுக்கள் புகாமல் நன்கு மூடி வைக்க வேண்டும்.

அரசு தேவையான கூடுதல் களப் பணியாளர்களை அமர்த்தி கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அழித்து வருகிறது. மேலும், கொசு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகை மருந்துகளை அடித்தல் மூலமாகவும் கொசுக்களை கட்டுப்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எவ்வித பதட்டமுமின்றி அருகில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தையோ, மருத்துவமனையையோ அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையோ உடனடியாக அணுகி தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் பெற வேண்டும். மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். மேலும் உரிய, தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், Fluids, இரத்தம், இரத்த தட்டணுக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஆகியவற்றின் இருப்பை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.

இது தவிர, இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எந்தவகை பதட்டமோ, பீதியோ அடையாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி தேவையான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment