மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை மாநிலங்களவையில் வலியுறுத்தல்

Facebook Cover V02
control-populationமாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பாரதீய ஜனதா எம்.பி. அசோக் பாஜ்பாய் மக்கள்தொகை விவகாரம் குறித்து பேசினார்.
‘‘இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவைவிட அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிவிடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும்.  மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம்தான், ஆனால், உலகமக்கள் தொகையில் 17.5 சதவீதத்தை இந்தியாதான் கொண்டுள்ளது.
கடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்தினார். இவருக்கு ஆதரவாக பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.
மக்களவையிலும் இதே கோரிக்கை 2-ம் தேதி எழுப்பப்பட்டது. மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.பி. உதேய் பிரதாப் பேசுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும், ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள்தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தியாவில் மக்கள் தொகை உயர்ந்து வருவது குறிப்பிட்டு பேசிய அவர் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு நிலைகளில் பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும். மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. அதேபோன்று மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Share This Post

Post Comment