டெல்லியில் தாக்குதலுக்கு திட்டமிட்ட 13 தீவிரவாதிகள் கைது மிகப்பெரும் சதி திட்டம் முறியடிப்பு

Facebook Cover V02

delliடெல்லியில் தாக்குதலுக்கு திட்டமிட்ட 13 தீவிரவாதிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதன் மூலம் தலைநகரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் கூட பதன்கோட் விமானப்படை தளத்தில் இந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து நாட்டின் முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகளின் நாச வேலைகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர உஷார் நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு சிலர் அடிக்கடி ரகசிய கூட்டம் நடத்துவதை உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆதரவளிப்பதை ஏப்ரல் 18-ந்தேதி கண்டறிந்த அதிகாரிகள் உடனே நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது டெல்லி சந்த்பாக் பகுதியை சேர்ந்த சஜித் அகமது மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. எனவே அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் அவர் தனது டெய்லரிங் கடையில் வைத்து மர்ம பொருள் ஒன்றை தயாரித்தபோது அது திடீரென வெடித்து அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது.

இதை கண்டறிந்து நேற்று முன்தினம் இரவில் களத்தில் இறங்கிய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி சிறப்பு படை போலீசார், சஜித் அகமதுவை அதிரடியாக கைது செய்தனர். அவரை தொடர்ந்து டெல்லிக்கு அருகே உள்ள உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியை சேர்ந்த சமீர் அகமது, தியோபந்த் பகுதியை சேர்ந்த சகிர் அன்சாரியையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் ஒரு வெடிகுண்டு, சேதமடைந்த மற்றொரு வெடிகுண்டு, 11 பேட்டரிகள், 250 கிராம் வெடிபொருட்கள் போன்ற வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் டெல்லியில் சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக கடந்த சில நாட்களாக வெடிகுண்டு தயாரிப்பது குறித்து இவர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும், இவ்வாறு நேற்று முன்தினம் பயிற்சி எடுத்தபோதுதான் வெடிகுண்டு வெடித்து, சஜித் அகமது காயமடைந்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், தீவிரவாதி சகிர் அன்சாரி ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசாரின் உறவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், தாக்குதல் தொடர்பாக விவாதிக்க விரைவில் பாகிஸ்தான் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 பி (குற்ற சதி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 3 பேரும் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

தீவிரவாதிகள் 3 பேரையும் 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரீதேஷ் சிங், 3 பேரையும் 14-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

இந்த தீவிரவாதிகளை தொடர்ந்து டெல்லியில் பல்வேறு பகுதிகள் மற்றும் உத்தரபிரதேசத்தின் தியோபந்த் பகுதிகளில் போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தினர். இதில் மேலும் 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளின் பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய பகுதிகளில் தீவிரவாத செயல்களை ஒழிக்க வேண்டும் என்ற மோடி அரசின் நடவடிக்கையில் இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

Share This Post

Post Comment