டெல்லியில் நடந்த விழாவில் ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

ekuruvi-aiya8-X3

Delhi-festival-Ramanujar-stamp-card-Prime-Minister-Modiராமானுஜரின் 1000-வது அவதார தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமானுஜரின் திருவுருவம் பொறித்த தபால் தலை நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் மோடி, ராமானுஜர் தபால் தலையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்தையும் உள்ளடக்கிய சமூகம், மதம் மற்றும் வேதாந்தமே ராமானுஜரின் வாழ்க்கை தத்துவம் ஆகும். இறைவனில் மனிதரையும், மனிதரில் இறைவனையும் கண்டவர் அவர். இறைவனின் பக்தர்கள் அனைவரும் சமம் என அவர் உணர்ந்து இருந்தார். சாதி பாகுபாடு மற்றும் அதிகார அடுக்கு சமூகத்தை தனது வாழ்க்கை முறை மற்றும் போதனைகள் மூலம் எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்டோருக்காக அழுத பெரிய இதயம் ராமானுஜர். ஒருவர் ஒடுக்குதலுக்கு உள்ளாகுதல் என்பது அவரது விதிப்பயன் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டு இருந்ததை அவர் உடைத்தெறிந்தார்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கடவுளாக தென்பட்டவர் ராமானுஜர். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்ததை அவர் முற்றிலுமாக மாற்றினார். நிர்வாக பிரிவுகளை ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர் வழங்கினார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும், அவர்கள் வாழ்வில் சீர்திருத்தங்களையும் கொண்டுவர பாடுபட்டதால்தான் அவரை அனைத்து சமூகம் மற்றும் சாதியை சேர்ந்தவர்களும் பூஜித்தனர். அவரது நினைவு தபால் தலையை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், அனந்த குமார், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share This Post

Post Comment