அ.தி.மு.க.வை மீட்க என்னுடன் சேருங்கள்: எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெ.தீபா ‘திடீர்’ அழைப்பு

ekuruvi-aiya8-X3

deepa_18102-450x319எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மனித புனிதவதி புரட்சித்தலைவி அம்மா 6-வது முறையாக சரித்திர சாதனை படைத்த முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அம்மா ஆட்சியையும், கட்சியையும் நம்மிடம் கொடுத்துவிட்டு மீளாத்துயரில் அம்மா நம்மை விட்டு சென்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மா தமிழக மக்களின் வாழ்வாதாரமாக அவதரித்து சமூக விஞ்ஞானியாக வாழ்ந்து காட்டினார். அம்மாவின் மறைவிற்குப் பின் லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் அன்பான அழைப்பை ஏற்று அம்மா அவர்கள் விட்டு சென்ற பணியை தொடர்வதற்கு நான் தலைமை ஏற்றுள்ளேன்.

இந்நிலையில் ஊழலை மறைப்பதற்கும் அதிகார பதவியை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதற்கும் சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான கூட்டங்கள் அம்மாவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வஞ்சித்து அவர்கள் சுய லாப நோக்கத்தோடு மட்டும் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் கட்சியும், சின்னமும் முடக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். குழுக்கள் இணைப்பு என்ற பெயரில் பதவியை மட்டும் குறியாக வைத்து எம்.எல்.ஏ.க்களை பற்றி அக்கறை கொள்ளாத நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்றகோரி இ.பி.எஸ்.சை சந்திக்க மனுக்களுடன் தலைமை செயலகத்தில் சந்திக்க முடியாமல் பரிதவிக்கும் காட்சியை பார்த்து மிகவும் வேதனை அடைகிறேன்.

மாலுமி இல்லாத கப்பலாக துடுப்பு இல்லாத படகாக நாம் இருக்கலாமா? நமது அம்மா உருவாக்கிய சிஸ்டத்தை ஒரு சில துரோகிகள் செய்த தவறுக்காக ரஜினிகாந்த் விமர்சனம் செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்ற அறிக்கை விட்ட ராமதாஸை கண்டு நாம் சீற வேண்டாமா? தொண்டர்கள் கொள்கை கோமான்களாக இலட்சிய வேங்கைகளாக அணிவகுத்து நிற்கிறார்கள்.

அ.தி.மு.க. எஃகு கோட்டையாகும். எளிதில் எதிரிகள் உள்ளே புக முடியாது. அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு பதவி பணம் ஈட்டிய ஓ.பி.எஸ்., சசிகலா, இ.பி.எஸ். போன்றவர்களை அடையாளம் கண்டு தொண்டர்கள் அ.தி.மு.க.வை மீட்க எனது தலைமைக்கு உளமாற வந்துள்ளதை போல் அம்மா உருவாக்கிய ஆட்சி தொடர அம்மாவால் சட்டமன்ற உறுப்பினராகிய அம்மாவின் விசுவாசமிக்க எம்.எல்.ஏ.க்களை அம்மாவின் ரத்த வாரிசான நான் தாய் உள்ளத்தோடு அழைக்கிறேன்.

எப்போதும் என்னை சந்திக்கலாம். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தர உங்களின் ஒருவராக இருந்து போராடுவேன், வாதாடுவேன் கோரிக்கைகளை வெற்றி பெற்று தருவேன். அ.தி.மு.க. என்பது பறவைகள் வந்து செல்லும் வேடந்தாங்கல் சரணாலயம் அல்ல. லட்சிய வீடு, கொள்கை பாசறை.

எனவே சூழ்ச்சியும் வஞ்சகத்தையும் வீழ்த்திட அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கத்தை துரோகி களிடமிருந்து மீட்டிட மாலுமியாக, படை தலைவியாக பணி யாற்றிட அனைத்து நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை மீண்டும் வாஞ்சையுடன் அழைக்கிறேன்.

புரட்சித்தலைவரால் வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மாவால் மீட்டெடுக்கப்பட்ட இரட்டை இலையை தற்போது முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டெடுத்து புரட்சித்தலைவி அம்மா கூறியதுபோல இன்னும் நூறு ஆண்டுகள் கட்சியையும், ஆட்சியையும் தமிழ் மண்ணில் நிலைக்க செய்திடுவோம்.

இவ்வாறு தீபா கூறியுள்ளார்.

Share This Post

Post Comment