தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘‘அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்கிறார்கள். அதற்கு தடை விதிக்க வேண்டும், கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் பதிவுக்கு பயோ மெட்ரிக் பதிவு கருவியை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த போது, ‘‘தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அந்தந்த மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கோவில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளதா? குடிநீர், கழிப்பறைக்கான கட்டண வசூல், சாமி தரிசனம் செய்வதில் பாகுபாடு உள்ளதா? என்பது குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு நடத்தி, மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கினை நேற்று ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலமாக சென்னை ஐகோர்ட்டில் இருந்தபடி நீதிபதி முரளிதரனும், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி கிருஷ்ணவள்ளியும் விசாரித்தனர்.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

மாவட்டந்தோறும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள். அந்த அறிக்கைகளின் அடிப்படையில் கோவில்களில் கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.

* கோவில்களில் அனைத்து பூஜைகளையும் சட்டப்படி நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

* அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இறைவனின் சர்வ வல்லமையும், பிரதிபலிப்பும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி சமமானவை என்பதை உறுதிப்படுத்த கோவில் நிர்வாகிகள், அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

* எதிர்காலங்களில் வி.ஐ.பி. தரிசன கலாசாரம் குறைக்கப்பட வேண்டும்.

* அனைத்து கோவில்களிலும் பயோமெட்ரிக் சாதனத்தை நிறுவி, சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் பயன்படுத்த வேண்டும். சிறப்பு பூஜை என்ற பெயரில் சட்டப்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களோ, மற்றவர்களோ பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

* பூஜை கட்டணங்கள் உள்பட அனைத்து விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை ஒவ்வொரு கோவிலிலும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

* கோவில்களில் கழிப்பறை வசதிகளை 3 மாதத்தில் ஏற்படுத்தி தர வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல பக்தர்களுக்கு குடிநீர் அத்தியாவசியமானது. அதையும் 3 மாதத்தில் செய்து தர வேண்டும்.

* பல கோவில்களில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று நீதிபதிகளின் அறிக்கை தெரிவிக் கிறது. எனவே சம்பந்தப்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோவில்களை சுற்றிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் மீதான தடையை கடுமையாக கடைபிடிப்பது, பசுமையை மேம்படுத்த கோவில் வளாகங்களிலும், கோவில்களை சுற்றிலும் மரங்களை வளர்க்க விதைகள் நடுவது அவசியம்.

* கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க, கோவில் களை அவ்வப்போது புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.

* கோவில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலையை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.

* கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில்களின் வருமான விவரங்களை கோர்ட்டில் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும்.

* கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தொடர்பான புகார்களை உடனடியாக விசாரிக்க அந்தந்த கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

* கோவில் நிலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை ஆக்கிரமித்து உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவற்றை 6மாதத்துக்குள் மீட்க வேண்டும்.

* கோவில் வளாகங்களில் காலாவதியான உரிமம் வைத்து கடை நடத்தி வருபவர்களையும் வெளியேற்ற வேண்டும்.

* சமீபத்தில் சிலைகள் திருட்டு சம்பவங்கள் பற்றிய செய்திகள் அனைவரும் அறிந்திருப்பார்கள். எனவே சிலைகள் திருட்டு, கோவில்களில் சுரண்டல் போன்றவற்றை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அனைத்து கோவில்களின் கேமராக்களையும் கண்காணிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும்.

* கோவில் சொத்துக்கள் தொடர்பான தகவல்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளும்படியாக அந்தந்த கோவில் கள் முன்பு தகவல் பலகைகள் வைக்க வேண்டும்.

இந்த வழக்கை வருகிற 22.1.2019 அன்றைய விசாரணை பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர், செயலாளர் ஆகியோர் கண்காணித்து இடைக் கால அறிக்கையை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல மேற்கண்ட உத்தரவை செயல்படுத்தியது குறித்து மீண்டும் மாவட்ட நீதிபதிகள் கோவில்களில் ஆய்வு செய்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


Related News

 • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
 • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *