ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஜெ.தீபா அறிவிப்பு

ekuruvi-aiya8-X3

deepa_10சசிகலாவை தவிர மற்றவர்களின் ஆதரவை ஏற்பேன் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும், எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று இரவு சென்னையில் அறிவித்தார்.

இதுகுறித்து நேற்று சென்னை தியாகராயநகர் சிவஞானம் சாலையில் உள்ள ஜெ.தீபா தன்னுடைய வீட்டில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- உங்கள் அரசியல் பயணம் குறித்து என்ன முடிவு எடுத்துள்ளர்கள்?

பதில்:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்துள்ளேன். இதுகுறித்த அறிவிப்பை நான் ஏற்கனவே அறிவித்துள்ளேன். மேலும், பேரவையினுடைய உயர்நிலை குழுவிலும் ஆலோசித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன்.

கேள்வி:- இந்த இடைத்தேர்தலில் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.விடம் ஆதரவு கேட்பீர்களா?

பதில்:- அதுபோன்ற திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. சசிகலாவை தவிர மற்றவர்களின் ஆதரவை ஏற்பேன்.

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் எதை கூறி வாக்கு கேட்பீர்கள்?

பதில்:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று கேட்பேன், அவர்களுக்கு தெரியும். அவர்களிடம் ஜெயலலிதாவின் புகழையும், அவர் விட்டுச் சென்ற பணியையும் தொடர்வதற்கு ஜெயலலிதாவின் வாரிசான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்பேன்.

கேள்வி:- அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பதால், ஆர்.கே.நகர் தொகுதியில் உங்களுக்கு எந்த அளவு வெற்றி வாய்ப்பு இருக்கும்?

பதில்:- ஆர்.கே.நகர் தொகுதியில் என்னை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நல்ல தீர்ப்பை எனக்கு வழங்குவார்கள்.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து உங்களுக்கு அழைப்பு விடுத்துவரும் நிலையில், நீங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற தயக்கம் காட்டுவது ஏன்?

பதில்:- நான் இதுவரை யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை, எனக்கு ஆதரவு அளிக்க முன்வருபவர்களை புறக்கணிக்க மாட்டேன். எனக்கு ஆதரவு அளிக்க அவர் தான் முன்வரவேண்டும். அதில் எந்த தயக்கமும் இல்லை.

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே?

பதில்:- அதுபற்றி எதுவும் தற்போது இறுதி செய்யப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.

கேள்வி:- தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கென்று சில வரலாறு உள்ளது. இந்தநிலையில், எப்படி நீங்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறுவீர்கள்?

பதில்:- முழு உழைப்பு என்னிடம் இருப்பதால், கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.

கேள்வி:- கடந்த தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்குகள் சதவீதம் குறைந்து வந்துள்ளதே? இந்த நிலையில், தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்:- இதற்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்குவார்கள். ஜெயலலிதாவின் இடத்தில் யார் இருக்கவேண்டும் என்பதையும் மக்களே தீர்மானிப்பார்கள்.

கேள்வி:- பேரவையின் நிர்வாகிகள் பட்டியலில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டதே?

பதில்:- நிர்வாகிகள் பட்டியலை பொறுத்தவரையில், நான் பேரவைக்கு பொருளாளராகவும், செயலாளராகவும் இருந்து பணியாற்றி வருகிறேன். ஓரிரு நாட்களில் பேரவையின் இறுதிபட்டியலை அறிவிக்க இருக்கிறேன். சமூக வலைத்தலங்களில் சிலர் தேவையில்லாமல் தவறுதலான அறிவிப்புகளை வெளியிட்டனர். அவை அனைத்தும் அதிகாரப்பூர்வ மற்றவை. அவற்றிற்கு முக்கியத்துவம் தரமுடியாது.

கேள்வி:- ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறாரே?

பதில்:- ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை இருப்பது குறித்து ஆரம்பத்திலேயே நான் கூறி வருகிறேன். அரசியல் ஆதாயத்துக்காக மூத்த அரசியல் தலைவர்கள் கூறுவதற்கும், நான் கூறுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

கேள்வி:- ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனவே?

பதில்:- சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் தூண்டுதலின்பேரில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கலாம். இந்த அறிக்கைகளின் மீது எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

கேள்வி:- உங்கள் பேரவையில் தீபக்கை இணைத்து பணியாற்ற வைப்பீர்களா?

பதில்:- தீபக் பேட்டியளிக்கும்போது, ஒருநாள் சசிகலா வேண்டும் என்கிறார், மற்றொரு நாள் டி.டி.வி.தினகரன் வேண்டாம் என்கிறார், அவருடைய பேச்சில் தெளிவு இல்லை.

இவ்வாறு ஜெ.தீபா கூறினார். அருகில், அவருடைய கணவர் மாதவன் இருந்தார்.

Share This Post

Post Comment