நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி உடனடியாக தரத் தயார்: ரஜினிகாந்த் உறுதி

rajini_vivasayeசென்னை போயஸ் கார்டனில் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார். அப்போது நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினி உறுதி அளித்தார்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகத்தில் தொடர் வறட்சியினால் விவசாய பயிர்கள் கருகின.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தினார்.

டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியிலும் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இன்று 11 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அங்கு ரஜினிகாந்த்தை சந்தித்து சால்வை அணிவித்தனர்.

தமிழக விவசாயிகளின் கஷ்டங்கள் பாதிப்புகள் குறித்தும் நதிகள் இணைப்பு தொடர்பாக கோரிக்கை மனுவையும் ரஜினிகாந்த்திடம் வழங்கினார்.

மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினி காந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த நிதி உதவியை பிரதமரிடம் உடனே வழங்குமாறு ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். அதனை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விரைவில் ரூ.1 கோடி நிதியை வழங்குவேன் என உறுதி அளித்தார்.

ரஜினியை சந்தித்த பின் வெளியே வந்த அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிகள் இணைப்புக்காகவும், பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் நலன்களுக்காகவும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தோம். நதிகள் இணைப்பு திட்டத்துக்காக ரூ.1 கோடி வழங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். அந்த நிதியை பிரதமரிடம் வழங்க கோரினோம். தான் அறிவித்தபடியே ரூ.1 கோடியை தருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்தார்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென் பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். விவசாயிகள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவளிப்பதாக உறுதி அளித்தார்.

இவ்வாறு அய்யாக் கண்ணு கூறினார்.

Share This Post

Post Comment