நடிகர் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை

ekuruvi-aiya8-X3

vishal_2908நடிகர் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சென்னையில் நடிகர் சங்க அலுவலகம் எதிரில் துணை நடிகர்-நடிகைகள் சிலர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனை கண்டித்து நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“நாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தவுடன் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் முறைப்படுத்தி 70 வயது முதல் 90 வயது வரை உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் மாத ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

தன்னிச்சையாக செயல்பட்ட ஏ.ஆர்.ஓ பிரிவு இப்போது சங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது. அங்கத்தினர் அல்லாதவர்களை பணியமர்த்தும் முறை ஒழிக்கப்பட்டதால் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு வேலை கிடைக்கிறது. கல்வி உதவி தொகையாக ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. நட்சத்திர கிரிக்கெட் நடத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி உள்ளோம். இவை அனைத்தும் ஒரு வருடத்தில் செய்து முடித்துள்ளோம்.

இந்தநிலையில் திட்டமிட்டு சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் முரண்பாடாக இருக்கிறது. அதன் பின்னணியில் இருப்பவர்களை யூகிக்க முடிகிறது. நிர்வாக பொறுப்பை ஏற்றபோதே எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தோம். அதை எதிர்கொள்ளும் தின்மை இருக்கிறது. உறுப்பினர்கள் நலனுக்காக நேர்மையோடு உழைத்துக்கொண்டு இருக்கும் இந்த நிர்வாகத்தை சீர்குலைக்க யாராவது நினைத்தால் இரண்டு மடங்கு பாய்ச்சலில் அதை எதிர்கொள்வோம்.

சங்கத்தின் மீது அரசியல் சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசாங்கத்தோடு இணைந்தும் இயைந்தும் நடந்து கொள்வதே சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியம். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சங்கம் என்றென்றும் கடமைப்பட்டு உள்ளது. அவர் தங்க கைகளால் அடிக்கல் நாட்டும் தருணத்துக்காக காத்து இருக்கிறோம். கட்டிடம் கட்ட வேண்டுமென்பது தேவை. அனைத்து முறைகளிலும் அது கட்டப்படும்.

சுயநலத்துக்காக செயல்பட்ட சில உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்ய தன்னிலை விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்தநிலையில் சில நபர்களை சேர்த்துக்கொண்டு அலுவலக ஊழியர்களை தாக்குவது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை சாதாரணமாக எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது. மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

அதற்காக அவசர செயற்குழு கூட்டம் உடனடியாக கூட்டப்படும். இன்னும் நேர்மையாகவும் வேகமாகவும் செயல்படுவோம். எதற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். சங்க கட்டிடம் கட்டுவதை தடுப்பதற்கும் புதிய நிர்வாகத்துக்கு நற்பெயர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததாலும் சங்கத்துக்கு நஷ்டங்களை ஏற்படுத்திய சில நபர்களின் தூண்டுதலால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share This Post

Post Comment