மரணம் அடைந்த நா.காமராசன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி

Facebook Cover V02

naa_kamarajபிரபல சினிமா பாடலாசிரியரும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசவை கவிஞராக பதவி வகித்தவருமான நா.காமராசன் சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். நா.காமராசன் உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நா.காமராசன் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நா.காமராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

“கவிஞர் நா.காமராசன் மறைவு செய்தி கேட்டு நான் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறேன். நா.காமராசன் மொழி போராட்டத்தின்போது பல்வேறு தியாகங்களை செய்தவர். குறிப்பாக 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு கால்களில் விலங்கிட்டு சிறையில் அடைபட்டிருந்த நினைவுகள் எல்லாம் நமது நெஞ்சங்களில் நிழலாடுகிறது.

காமராசன் ஒரு மிகப்பெரிய கவிஞராக இலக்கியத்துறையில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தவர். அவருடைய மொழிப்பற்று, இலக்கியப்பற்று, இனப்பற்று ஆகியவற்றை பாராட்டி பெருமை சேர்க்கும் வகையில் தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் நா.காமராசனுக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்.

கலைஞர் மீது நா.காமராசனுக்கு அளவு கடந்த பாசமும் அன்பும் எப்போதும் இருந்திருக்கின்றது. அரசியலைப் பொறுத்தவரையில் நா.காமராசனுக்கு சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படும் நிலை இருந்தாலும் அவருடைய தமிழ் பற்று கலைஞர் உள்ளத்தில் ஆழமாக பதிந்து இருந்த காரணத்தால் அவரிடத்தில் எப்போதும் அன்பு காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட சிறந்த கவிஞரான நா.காமராசனை இழந்து வாடிக்கொண்டிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உற்றார்-உறவினர்களுக்கும் தி.மு.க சார்பில் குறிப்பாக தலைவர் கலைஞர் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment