பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை – நித்யா மேனன்

Nithya_menon‘‘பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் நடிக்க வரவில்லை’’ என்று நடிகை நித்யா மேனன் கூறினார்.

இதுகுறித்து நடிகை நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘விக்ரமுடன் ‘இருமுகன்’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், சுதீப் ஆகியோருடன் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல கதைகள் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்குவதுதான் என் ஆசை. பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. சிறுவயதில் பாடுவதில் ஆர்வம் இருந்தது. பள்ளி பாட்டு போட்டிகளில் கலந்துகொண்டேன். அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

தபு தங்கை வேடத்தில் அறிமுகமானேன். அந்த படத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். கல்லூரியில் படிக்கும் போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை நீக்கி விட்டேன். செல்போன் இருக்கிறது. அதில் மணிக்கணக்கில் பேசுவது இல்லை. தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே அதனை பயன்படுத்துகிறேன். படப்பிடிப்பில் எனது காட்சிகள் முடிந்ததும் மற்றவர்கள் நடிப்பதை கவனிப்பேன். இல்லையேல் தியானம் செய்வேன்.

எனக்கு ஏற்கனவே காதல் வந்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் காதலித்த நபருடன் சேர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்து அவரை பிரிந்து விட்டேன். இப்போது காதல், திருமணம் பற்றியெல்லாம் நான் சிந்திப்பது இல்லை. எனக்கு தங்கத்தை விட வெள்ளி நகைகள் அணியத்தான் பிடிக்கும், காலில் பல வருடங்களாக ஒரே வெள்ளிக்கொலுசைத்தான் அணிந்து இருக்கிறேன்.

என் தந்தை நாத்திகர். இதனால் என் அம்மா வீட்டில் சாமிக்கு பூஜைகள் செய்வது இல்லை. ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனது தந்தை கோவில்களுக்கு என்னை கூட்டிச்செல்வார். நான் சாமி கும்பிட்டு விட்டு வருவது வரை கோவிலுக்கு வெளியிலேயே காத்து இருப்பார். எனக்கு மனதில் ஒன்றை வைத்து வெளியில் வேறுமாதிரி பேசத்தெரியாது.

மற்றவர்களிடம் மரியாதை காட்டுவது மாதிரியும் அப்பாவி மாதிரியும் நடிக்க தெரியாது. எந்த விஷயமானாலும் நேருக்கு நேர் பேசி விடுவேன். இதை வைத்து சிலர் நான் ஒருமாதிரி பெண் என்றும் என்னுடன் வேலை செய்வது கஷ்டம் என்றும் கதைகட்டி விடுகின்றனர். இது என் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. என்னுடன் சேர்ந்து பணியாற்றிய யாரும் இப்படி சொல்ல மாட்டார்கள் என்று நித்யா மேனன் கூறினார்.

Share This Post

Post Comment