
மண்பறிப்பு என்பது எம் அடையாளத்தைச் சிதைப்பதற்கான ஒருவழி முறை மட்டுமல்ல நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இனவழிப்பின் ஒரு பகுதி (genocide by attrition) என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என கனடாவின் வின்ஸர் பல்கலைக்கழகச் சமூகவியல்,மானிடவியல் பேராசிரியரும் கவிஞருமான சேரன் அவர்கள் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை ஸ்கார்பறோ சிறி ஐயப்பன் ஆலயத்தில் கனடா தமிழ் அரசியல் செயலவை ஒழுங்கு செய்த “சிங்களக் குடியேற்றங்களும்; வரலாற்றுக் கருத்தியலும்” தொடர்பான கலந்துரையாடலின் போது இந்தக் கருத்தினை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனும், யோகேஸ்வரனும் சிறப்புரையாற்றினார்கள்.
“எல்லைகளை நோக்கி நாங்கள் செல்லாவிட்டால் எங்களை நோக்கி எல்லைகள் வரும்” என்று 1960 களில் திரு சி. சுந்தரலிங்கம் கூறியது போல் நாங்கள் எங்கள் எல்லையை நோக்கி செல்வதில் அக்கறை காட்டாமல் விட்டு விட்டோம் அதனால் இன்று எம்மை நோக்கி எல்லைகள் வரத் தொடங்கி விட்டன. இனப்படுகொலை சார்ந்து தமிழ் மக்களை எல்லா இடங்களிலிருந்தும் விரட்டியடிக்கின்ற இந்த நிலப்பறிப்பு நீண்டகாலமாகத் ததிட்டமிடப்பட்டு எல்லாவகையான இலங்கை அரசுகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
என்பதை சேரன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
வடக்கில் தந்திரோபயரேதியாக இராணுவ முகாம்களையும், முடிந்தால் சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவி தமிழர்களை ஒடுக்க முடியுமோ அவ்வாறு நடந்து கொள்ளும் படி சிறிமாவின் ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக இருந்த சி நீல் ஜெயவீரவிடம் அன்றைய பாதுகாப்பு அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டிருந்தது என்பதைக் குறிப்பிட்ட சேரன் அவர்கள் குடியேற்றங்கள் தொடர்பான அண்மைக்கால வரை படங்களையும் விளக்கங்களையும் வழங்கினார்.
சிங்கள அரசாங்கம் தனக்கென்றொரு மீள் நிர்ணயிக்கப்பட்ட மாகாண எல்லை வேலைத் திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் கடல் ஒரு எல்லையாக இருக்க வேண்டும் என்று 80 களின் ஆரம்பித்தில் சில சிங்களக் கோட்பாட்டாளர்கள் முன்வைத்த திட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும் அதன் அடிப்படையில் தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த நிலப்பரப்பைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன் தமிழ் மக்களின் பரம்பல் எப்படி இருந்தது என்றும் பின்னர் பிரித்தானியர்களால் எவ்வாறு நிர்வாக வசதி என்ற பேரில் இவை மாற்றப்பட்டன என்பதிலிருந்து தற்போதைய அரசின் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் தமிழர் நிலப்பரப்பு எவ்வாறு சுருங்கப் போகின்றது என்பதையும் மிகவும் தெளிவாக விளக்க வரைபடங்களுடன் சேரன் அவர்கள் தெரியப்படுத்தினார்.
புலம் பெயர்ந்த மக்கள் களத்தில் உள்ளவர்களுக்கு இங்கிருந்து கொண்டு கட்டளைகளை இடாமல், களத்தில் உள்ளவர்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உணர்வுத் தோழமையுடன் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மண்பறிப்புக்கு மாற்றாக புலம்பெயர்ந்தோர் செய்யக் கூடிய ஐந்து வேலைத் திட்டங்களையும் அவர் விளக்கினார்.