சென்னையில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மூவர் மீது வழக்கு

thesiakeethamசென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நிற்காத மூவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தற்போது சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றை நடத்திவருகிறது. ஜனவரி 5 முதல் 12ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன.

விஜயா ஃபோரம் மால் என்ற ஷாப்பிங் மாலில் உள்ள பாலஸோ திரையரங்கில் இன்று நன்பகல் 12 மணிக்கு ’க்ளோரி’ என்ற பல்கேரிய நாட்டுத் திரைப்படம் திரையிடப்பட்டது.

படம் துவங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்த ஸ்ரீலா, அவரது தாயார் உள்ளிட்ட சிலர் எழுந்து நிற்கவில்லை. இதனை வேறு சிலர் கண்டித்ததோடு, அவர்களை வெளியேற்றவும் முயற்சித்தனர்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து திரைப்படம் நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். எழுந்து நிற்காத 3 பேர் வட பழனி காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, பிபிசியிடம் பேசிய ஸ்ரீலா, “தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற பலரும் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தனர். ஆனால், விழாவுக்கான தன்னார்வலர்கள் எங்கள் பாஸ்களைப் பறிக்க முயன்றனர். உட்கார்ந்திருப்பது தேசிய கீதத்தை அவமதிப்பதாகாது என்று கூறியும் காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது” என்று கூறினார்.

தன்னுடைய தாயார் வயதானவர் என்பதால் அவர் எழுந்து நிற்கவில்லையென்றும் தனக்கு எழுந்து நிற்பதில் விருப்பமில்லையென்றும் அவர் கூறினார்.

இது குறித்து விழா அமைப்பாளரான தங்கராஜிடம் கேட்டபோது, “நாங்கள் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துத்தான் விழாவை நடத்துகிறோம். காவல்துறை நடவடிக்கையை நாடியது, திரையரங்கின் நடவடிக்கை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. எங்களுடைய தன்னார்வலர்கள் பாஸ்களைப் பறிக்க முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த மூவர் மீது 1971ஆம் ஆண்டின் தேசியச் சின்னங்களுக்கு அவமரியாதை செய்தலைத் தடுக்கும் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக வடபழனி காவல் நிலையத்தினர் தெரிவித்தனர். அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share This Post

Post Comment