சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டது – அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

ekuruvi-aiya8-X3

vaartha_airplanவார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது.

இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி ஓடுபாதையை மூடி, விமான போக்குவரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் மலேசியா உள்பட சில நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், ‘வார்தா’ புயல் தாக்கம் குறைந்து நிலைமை சீரடைந்தால் ஓடுபாதை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

விமான போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

சில பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அந்த பயணிகளிடம் நிலைமையை விவரமாக விளக்கி கூறினார்கள். தொடர்ந்து மழை பெய்ததால் பயணிகள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே தஞ்சம் புகுந்து இருந்தனர்.

Share This Post

Post Comment