வரம்பு மீறுகிறதா மாகாண அரசு ? (By Triden V Balasingam)

டொரோண்டோ மாநகரசபை உறுப்பினர்களை 25 ஆக குறைப்பதாக மாகாண முதல்வர் Ford அறிவித்ததில்  இருந்து  தொடர்ச்சியாக  நடந்தேறும்  விடயங்கள்  தொடுக்கும் ஒற்றை  கேள்வி இதுதான். தனது அதிகாரங்களை சுய  நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பிரயோகிப்பதன்  மூலம்  மாகாண  அரசு அத்துமீறி  செயற் படுகிறதா என்பதே !
இவற்றை  நியாயப்படுத்தும் அல்லது  மறுதலிக்கும்   வழமையான  கட்சி சார் அரசியல்  மூளைச்சலவைகளுக்கும்  போதனைகளுக்கும்    அப்பால் இது குறித்த  தெளிவான விளக்கத்தை தமிழர்கள்  மத்தியில்  ஏற்படுத்துவதே  இக்கட்டுரையின்  குறிக்கோள்.
 கேள்வியின்  முழுமையான  சூத்திரத்தை  புரிந்துகொள்வதற்கு நாங்கள் 1998 இல் பழமைவாதி மைக் ஹாரிஸ் இன்  அரசாங்கம்   கொண்டுவந்த  டொரோண்டோ பெரும்பாக  இணைப்பு பற்றி சிந்திக்க வேண்டும். டொரோண்டோ நகர், வடக்கு மற்றும் கிழக்கு யோர்க், யோர்க், எட்ரோபிகோ,   ஸ்கார்பரோ  உள்ளிட்ட 6 நகரசபைகளை இணைத்து தனிபெரும்  டொரோண்டோ  நகராக மாற்றுவதன்  மூலம் 136மில்லியன்  டொலர்களை  வருடாந்தம் சேமிக்கும்  யுடோபியன் கனவு அது. இதன் மூலம் 4000கும்  அதிகமான மேலதிக தொழிலாளர்களை  பணிக்கு அமர்த்த நேர்ந்ததோடு 275மில்லியன் மேலதிக செலவும் ஏற்பட்டது. அப்போது  இந்த  இணைப்பு  குறித்து பெரும் எதிர்ப்பு கிளம்பியதோடு இதனை  நிரூபித்த இரண்டில்  மூன்று பெரும்பான்மையுடைய வாக்கெடுப்பும் பழமைவாத  அரசால் நிராகரிக்கபட்டது.
varammpuஅன்று  மைக் ஹாரிஸ்   பிரேரித்த திட்டத்தில்  ஒன்றிணைந்த டொரோண்டோ பெருநகரில் காலப்போக்கில்  வட்டாரங்களை குறைத்து  மீள் வரைபு செய்வதும் ஒன்றாகும். அன்றைய இந்த தோல்வியடைந்த பழைய கள்ளை புதிய  மொந்தையில்  ஊற்றுவதன்  மூலம் முதலாளித்துவ நன்மைகள் பெறுவதே  சமீபத்திய  குளறுபடிகளின்  பின்னணி. தவிர மாகாண  முதல்வர் Ford  நகர பிதாவாக  போட்டியிட்டு தோல்வியடைந்த
டொரோண்டோ நகரசபை  மீதும்  காழ்ப்புணர்வு மிகையான   தமது  அரசியல்  எதிரிகள்  மீதும்  பழிதீர்ப்பதும்
துணை பின்னணிகளாகவும் இருக்கலாம்.
தமது செயற்பாடுகளை  நியாயப்படுத்த  குயீன்ஸ் பார்க்கில் பேசிய முதல்வர்  Ford  டொரோண்டோ நகரசபை  உறுப்பினர்கள்  மதுபோதையில் மிதக்கும்  மாலுமிகளை  போல் செயற்படுபவர்கள் என்றும்  நகராட்சி  விடயங்களில்  அவர்கள்  இடியப்ப சிக்கல் போன்ற நிலைமைகளை
தோற்றுவிப்பவர்கள்  என்றும்  தெரிவித்தார். உண்மையில்  டொரோண்டோ  மாநகர சபை  அவ்வளவு  மோசமானதா என்றால்  இல்லை என்பதே  உடனடி  பதில்.
Ford அரசாங்கத்தின்  பிரேரணைகளின் படி 47 மாநகர சபை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 25ஆக குறைப்பதில் 25 மில்லியன் சேமிக்கமுடியுமாம். இது டொரோண்டோவின் மொத்த செலவீனத்தின் ஒரு வீதத்தின் ஒன்றில் இருபது பங்கு. இதன் மூலம் பெரிதாக எதுவும் சாதித்து  விட  முடியாது என்பதோடு இதன் விளைவாக வரும் அதிகாரத்துவம் சார்ந்த மேலதிக செலவுகள் இந்த 25 மில்லியன் சேமிப்பிலும் பலமடங்கு அதிகம்  என்பதே  உண்மையாகும். இவை எல்லாவற்றிட்கும் அப்பால் தமிழர்கள் போன்ற சிறுபான்மையினத்தவரின் எண்ணங்கள் நகரசபையில் பிரதிநிதித்துவப்படுத்த படமுடியாமல் போகும் அபாயமும்   உருவாகியுள்ளது.
 நிலக்கீழ்  தொடருந்து  கட்டுமானம் தொடர்பாக  தெளிவான  ஒரு முடிவை  டொரோண்டோ நகரசபை  எடுக்க முடியாமல்  திண்டாடுவதும்   நகரசபை  உறுப்பினர்களின்  எண்ணிக்கை  அதிகரிப்புடன்  தொடர்புபடுத்தபடுகிறது.  பல பில்லியன்  முதலீட்டை  அடிப்படையாக  கொண்ட நிலக்கீழ்  திட்டங்கள்  பலகாலமாக  திரிசங்கு நிலையில்  இருப்பதன் பின்னணி அதுவல்ல. முன்பு  பதவியில்  இருந்த மாகாண  லிபரல்  அரசின்  தலையீடுகள்  நிதி வழங்கல்   தொடர்பான  கொள்கை  மாற்றங்கள் உட்பட   சட்ட நடவடிக்கைகள் மற்றும்   சிக்கலான பாதாள  கட்டுமான பொறியியல்  தொடர்பான பிரச்சினைகளுமே  முதன்மையானவை. இப்போது நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும்  எக்ளிண்டன் மெது தட தொடருந்து  பாதை  நிர்மாணம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
 கிடப்பில்  போடப்பட்ட   அனைத்து தொடருந்து  தடங்கலும் இப்போது  பாவனையில்  இருந்திருந்தால்  டொரோண்டோவில்  அதிகரித்து வரும் வாகன நெரிசல்  கட்டுக்குள்  இருந்திருக்குமா  என்றால் துரதிஷ்டவசமாக பழமைவாதிகள் இங்கேயும் தவறான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.
டொரோண்டோவில்   தோன்றும் சிக்கலான வாகன  தேக்க  நிலைக்கு  காரணம் நகருக்கு   உள்வரும்  வெளிச்செல்லும் வாகனங்களும்  பல்வேறுபட்ட  கட்டமைப்பு  பராமரிப்பு  வேலைகளுக்காக  மூடப்படும்  வீதிகளுமே  காரணங்கள்  ஆகும். இவற்றை தொடருந்து  தடங்களை  விஸ்தரிப்பதன்  மூலம்   சரிசெய்ய  இயலாது என்பதே  வெளிப்படை.
மாறாக  கம்பெனிகள்  தமது  நடைமுறை  சாத்தியம் உள்ள  தொழிலாளர்களை கணிசமான நாட்கள்  வீட்டில்  இருந்து தொழில்படவைப்பதன்  மூலமாகவும் கனரக வாகனங்களை உச்ச நேரங்களில் நகரின் மத்திய  பகுதிக்கு  செல்வதை  தடுப்பதன்  மூலமும் எளிதாக  தீர்க்கலாம். இவற்றிற்கு  மாகாண  அரசு பல  ஆக்கபூர்வமான முதலீடுகளை  செய்ய   வேண்டி  வரும் என்பதோடு தற்போது பதவி  ஏற்றுள்ள அரசு தீவிர  வலதுசாரிகளுக்கும்  பின்கதவு முதலாளிகளுக்கும்   நன்மை பயக்காத திட்டங்களில்  நாட்டம் காட்டாது  என்பதுமே  பேருண்மை ஆகும்.
 நகரசபை  தன் பங்குக்கு என்னவிதமான  எதிப்புகளை காட்ட  போகிறது என்று சிந்தித்தால்  பழமைவாத  கட்சியின்  அனுதாபியும் 13 வட்டார நகரசபை  உறுப்பினருமான  றொக்கோ அச்சன்பொங் ,  Ford அரசாங்கம்
நியாயமற்ற  ரீதியில்   நடந்துகொள்வது அதிருப்தி அளிப்பதாகவும் தான்  இதுகுறித்து  மாகாண அரசுக்குள்ள  அதிகாரங்களை  பரிசீலிக்க உச்சநீதிமன்றை  நாடவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். நகரசபை உறுப்பினர்கள் மாகாண அரசை எதிர்ப்பதாக வாக்களித்துள்ள   நிலையில்   கணக்காளர்கள்   மற்றும் சட்ட ஆலோசகர்கள்  மூலமாக  அரசியலமைப்பில்  உள்ள  வரைபுகளை  நகரபிதா  தமக்கு சாதகமாக பயன்படுத்தலாம்.
மத்திய லிபரல் அரசு இவை யாவற்றையும் விரும்ப  தகாத  பொறுமையுடன்  பார்த்துக்கொண்டிருந்தாலும்   Ford அரசு  அத்துமீறுகிற  சந்தர்ப்பத்தில் குயின்ஸ் பார்கை  தனிமைப்படுத்திவிட்டு  நிதிவழங்கல்களை நேரடியாக  நகரசபைகளுக்கு வழங்க  எத்தனிக்கலாம். அரசியலமைப்பின்  படி   நகரசபைகளின்  தோற்றுவாய்   மாகாண அரசு  ஆகையால்  இங்கேயும் பல  சிக்கல்கள்  தோன்றும். மத்திய  அரசு வழங்கும் மாகாண நிதி ஒதுக்கீடுகளின் மூலமாக அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஒண்டாரியோ மாகாணம் NAFTA தொடர்பில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் பின்வாங்கலாம்.
பழமைவாதிகள்  ஆட்சிக்கு  வந்து முப்பது  நாட்கள் கடந்துள்ள  நிலையில் ஆக்கபூர்வமற்ற  அல்லது  இஸ்திரமற்ற  அமளிதுமளிகள், தினம் எதாவது ஒரு வம்பை உருவாக்கி அதன் மூலமாக காலத்தை ஓட்ட முயலும்  தன்மை இவை  யாவும்  ஒன்றை தான் நினைவூட்டுகிறது.  தெற்கில் அமெரிக்க அதிபர் Trump இன்   வழிமுறைகள்  ஒண்டாரியோவின் பழமைவாத  அரசுக்கு ஈர்ப்புமிக்கதாக   தென்படுகிறதா என்கிற பீதி மிக்க  கேள்வியே  அது.மாகாண  முதல்வரிடம்  குவிந்து கிடக்கும்  அதிகாரங்கள் இந்த  கேள்விக்கான  பதிலை   இனிவரும்  நாட்களில்  எடுத்துணர்த்தும்.
கடைசியாக  எஞ்சியிருக்கும்  மிகப்பெரிய கேள்வி இந்த  அரசியல் பூகம்பத்தின் மத்தியில் தமிழர்களின் கணிசமான விருப்புவாக்குகளுடன் குயீன்ஸ்பார்க்  போன நம்மவர்களின் நிலை என்ன  என்பதே. அவதானித்த வரையில் பழமைவாத தமிழர்கள் அமைச்சு பதவிகள் கிடைக்கும்  என்கிற  தவறான கற்பனை துயரத்தில்   இருந்து  இன்னமும் முழுதாக  வெளிவராத  நிலையில் இருக்கின்றனர். அமைச்சு  பதவிகள்  ஒதுக்கீடுகள்  எல்லாம் சிறுபான்மையினரின்  அபிலாசைகளை  நிராகரிப்பதாகவே  உள்ளன.
இந்நிலையில்  இவர்கள்  மாகாண அரசில் அழுத்தம்  மிக்க  அல்லது  தமிழ் தேசிய  நிகழ்ச்சி நிரலுக்கு  ஆக்கபூர்வமான பங்களிப்பு  வழங்கக்கூடிய  ஏதேனும்  ஒன்றை  செய்யமுடியுமா  என்பது  சந்தேகமே.
அவ்வாறான  நிலையில் சுய  வேலைத்திட்டங்கள்  மூலமாக நான்கு  வருடங்களில்  தொகுதிகளில்  தன்னம்பிக்கையுடன்  இறங்கி  வாக்கு  சேகரிப்பது  என்பது இம்முறை  மாதிரி அல்லாது   தனிப்பட்ட  வெற்றியின்  பாற்பட்டது. ஒரு சிறுபான்மை   இனம் சார்ந்ததல்ல!
By Triden V Balasingam

Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *