விபத்துக்கு வழிவகுக்கும் தகுதியற்ற வாகனங்கள்

ekuruvi-aiya8-X3

transபஞ்சம், பட்டினி, வறுமை, உயிர்க்கொல்லி நோய், போர், இயற்கை பேரழிவு உள்ளிட்டவற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையைக் காட்டிலும் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது கவலையளிக்கும் விஷயம்தான்.

இந்திய அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதேபோல உயிரிழப்புகளும் இங்கு அதிகமே.இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான தகவல் உள்ளபடியே கவலையை இரட்டிப்பாக்குகிறது. ஆம். தமிழகத்தில் இயங்கும் வர்த்தக வாகனங்களில் 5 வாகனங்களில் ஒன்று தகுதிச் சான்று பெறாமலேயே இயக்கப்படுகின்றன என்பதுதான்.

தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 40 சதவீதம் கனரக, வர்த்தக வாகனங்களால் ஏற்படுகின்றன. இவ்விதம் விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களில் 18 சதவீத வாகனங்கள் உரிய தகுதிச் சான்று பெறாதவை என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகன சட்ட விதி 56-ன் கீழ் இந்திய சாலைகளில் இயக்கப்படும் பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) தகுதிச் சான்று பெற வேண்டியது மிகவும் கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் இதை புதுப்பிக்க வேண்டியதும் அவசியம்.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 11 லட்சம் வாகனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் தகுதிச் சான்று இல்லாமலேயே இயக்கப்படுகின்றன.

பொதுவாக தகுதிச் சான்று (எப்சி) இல்லாத வாகனங்கள் போலீஸார் சோதனையில் சிக்கினால் அவற்றுக்கு அதிகபட்சம் ரூ.1,000 அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கினால் மட்டுமே இத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே தகுதிச் சான்று இல்லாமல், போலீஸார் பிடித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி தப்பிவிடலாம் என்ற மனோபாவம் அதிகரித்து வருவதும் இதற்குக் காரணமாகும்.

பொதுவாக வர்த்தக வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கும் முன்பு 60 விஷயங்கள் கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு வாகனத்துக்கு எப்சி வழங்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால் ஒரு ஆர்டிஓ நாளொன்றுக்கு 200 முதல் 300 வாகனங்கள் வரை சான்று வழங்குகிறார். ஆக இவ்விதம் அவசரகதியில் தகுதிச் சான்று பெற்ற வாகனங்களும் சாலைகளில் இயங்கும் வகையில் முழுத் தகுதியுடன் செயல்படுகின்றனவா என்பது கேள்வியே.

தகுதிச்சான்று வழங்குவதற்காக தானியங்கி வாகன தகுதி சோதனை மையங்களை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதற்காக எந்த நடவடிக்கையையும் அரசு எடுத்ததாகவே தெரியவில்லை.

பொதுவாக தகுதிச் சான்று இல்லாத வாகனங்கள் விபத்து ஏற்படுத்தியிருந்தால் வாகன காப்பீடு கோர முடியாது. இதுபோன்ற வாகனங்களுக்கு இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிராகரித்துவிடும். ஆனால் இதுபோன்ற வாகனங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் இழப்பீடு கோர முடியாது. இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் நிலை மிகவும் பரிதாபகரமானது. குடும்பத் தலைவனை இழந்து, குறைந்தபட்சம் காப்பீடு மூலமாக கிடைக்கும் தொகை மூலம் குடும்பத்தை பராமரிக்கலாம் என்ற நிலையும் இதுபோன்ற சூழலில் சாத்தியமாகாமல் போவது துரதிருஷ்டமே.

வாகனங்கள் மூலம் லாபம் சம்பாதிக்கும் உரிமையாளர்கள் வாகனங்களை உரிய வகையில் பராமரிப்பதோடு அவற்றுக்கு உரிய தகுதிச் சான்று மற்றும் காப்பீடுகளை உரிய காலத்தில் பெற்று இயக்கினால் மட்டுமே சாலை விபத்துகள் குறையும். பொறுப்பு என்பது அனைவருக்குமே உள்ளதுதான். சாலை சரியில்லை, குண்டும் குழியுமாக உள்ளது என்று குறை கூறும் முன்பு அதில் இயக்கும் வாகனம் அனைத்து தகுதியையும் பெற்றிருக்கிறதா என்று அவரவர் ஆத்ம பரிசோதனை செய்வதுதான் இதற்கு ஒரே வழி.

Share This Post

Post Comment