கருப்பு பணம், ஊழலில் இருந்து நாட்டை சுத்திகரிப்பதே என் முன்னுரிமை திட்டம் – பிரதமர் மோடி

ekuruvi-aiya8-X3

modi_cellமலேசியாவில் தொழில் அதிபர் மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ‘‘கருப்பு பணம், ஊழலில் இருந்து நாட்டை சுத்திகரிப்பதே என் முன்னுரிமை திட்டம்’’ என கூறினார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று ‘இக்கனாமிக் டைம்ஸ் ஆசிய தொழில் அதிபர்கள் மாநாடு–2016’ நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வழியாக பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்தியா தற்போது பொருளாதார மாற்றங்களை கண்டு வருகிறது. நாங்கள் இப்போது ரொக்கமில்லா, டிஜிட்டல் பண பரிமாற்ற முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இப்போது நாட்டை கருப்பு பணம், ஊழல் ஆகியவற்றில் இருந்து சுத்திகரிப்பதுதான் என் முன்னுரிமை திட்டம்’’ என்று கூறினார்.

அவர், ‘‘வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அல்லது சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன’’ எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகள் பெருமளவில் குவிவதற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறைக்கு மாறுவதற்காக அரசியல் சாசன திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவில் மறைமுக வரிமுறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் எனவும், அடுத்த நிதி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:–

இந்தியாவில் இல்லாதவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்து வந்துள்ளோம். (முதலீடுகளுக்கு) இந்தியா நல்லதொரு இடம் மட்டுமல்ல, இந்தியாவில் இருப்பதுவும் ஒரு நல்ல முடிவு ஆகும்.

அன்னிய நேரடி முதலீட்டை பொறுத்தமட்டில், புதிய துறைகளை திறந்து விட்டுள்ளோம். தற்போது இருந்து வரும் துறைகளிலும்கூட, அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தி இருக்கிறோம்.

அரசின் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் தொடரும். முதலீடுகளுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படும்.

கடந்த 2½ ஆண்டுகளில் 130 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 71 ஆயிரம் கோடி) அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

இந்தியாவில் (முதலீட்டாளர்களுக்கு) சாதகமான கொள்கை மாற்றங்கள், ஒழுங்குமுறைகள், முதலீட்டு சூழல்கள் ஏற்பட்டிருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், தொழில் முனைவோர் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. உலகளவில் உற்பத்தி துறையில் இந்தியா 6–வது மிகப்பெரிய நாடாக உள்ளது.

இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதை உறுதிப்படுத்துவற்கான முயற்சிகள் சட்ட வடிவிலும், அமைப்பு ரீதியிலும் பரந்து விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன.

தொழில் தொடங்குவதை பதிவு செய்வதற்கு, ஏற்றுமதி–இறக்குமதி அனுமதி பெறுவதற்கு ஒற்றைச்சாளர முறை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் பலனை பல்வேறு அறிகுறிகளை, இந்தியாவின் சர்வதேச தர வரிசையில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

அறிவுசார் சொத்துகளைப் பொறுத்தமட்டில், எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செயல்படுவதற்கு, தேசிய அறிவுசார் சொத்து உரிமைகள் கொள்கையை வகுத்து பின்பற்றுகிறோம்.

இந்தியாவில் ‘ஸ்டார்ட்அப்ஸ்’ நிறுவனங்கள், அடுத்த மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழும். அது, கிட்டத்தட்ட ஒரு புரட்சி போன்றது. எங்கள் கைகளில், எதிர்கால உள்கட்டுமான வளர்ச்சி, மிகப்பெரிய பணியாக உள்ளது. நாங்கள் தொழில்துறை தாழ்வாரங்களை கொண்ட புதிய ஐங்கோணத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

தளவாட தடைகளை அகற்றுவதுடன், சாலைகள், ரெயில்வே, துறைமுகங்களை நாடு முழுவதும் மேம்படுத்துகிறோம். இது ஒருங்கிணைப்புக்கான ஒரு தருணம். நாங்கள் மிகவும் திறந்த மற்றும் ஒன்றுபட்ட பொருளாதார நாடுகளில் ஒரு நாடாக திகழ்கிறோம்.

21–ம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு. உலகளவில் பொருளாதார சூழல் சாதகமற்று, நிச்சயமற்று காணப்பட்டாலும்கூட, ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது.

இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளை சிறப்பாக ஒருங்கிணைப்பதில் ‘ஆசியான்’ நாடுகள் நல்ல முயற்சி எடுத்துள்ளன.

இந்திய சமூகத்தினர் மலேசியாவில் பெருமளவுக்கு உள்ளனர். அது இந்திய, மலேசிய இரு தரப்பு உறவுகள், காலவரையறைக்கு அப்பாற்பட்டதின் வெளிப்பாடு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment