மட்டக்களப்பு எல்லையில் சிங்களக்குடியேற்றம்!

batticolaமட்டக்களப்பு எல்லையில் அத்துமீறிய சிங்களக்குடியேற்றம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து அப்பிரதேசத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான மாதவணை மற்றும் மயிலத்தமடு பிரதேசங்களில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்களக்குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராசசிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவொன்று இன்று காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்தனர்.

இதில் மட்டக்களப்பு செங்கலடிப்பிரதேச செயலர் பிரிவு மற்றும் கிரான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பிரதேசமான மாதவணை மற்றும் மயிலத்தமடு பகுதிகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களும் விகாரைகளும் அமைக்கப்பட்டுவருவை கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

இங்கு குடியேறியுள்ள மக்கள் சுமார் 300 பேர் வரை தாம் இந்த நிலத்தில் கடந்த மூன்று வருடங்களாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தமக்கான உதவியை மங்களராமய விகாராமபதி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைவிட இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் உள்ள விகாராதிபதி தெரிவிக்கையில் 1967ஆம் ஆண்டிலிருந்து தாம் அங்கே குடியிருப்பதாகவும், யுத்தத்துக்குப் பின்னர் தாம் இடம்பெயர்ந்ததாகவும் இப்போது மீண்டும் குடியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக கூட்டமொன்று நடாத்தவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பிரதேசத்தைச் சென்று பார்வையிட்ட பி.எஸ்.எம் சாள்ஸ், கி.துரைராசசிங்கம் மற்றும் கிராமசேவையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment