சசிகலாவும், தீபக்கும் சேர்ந்து அத்தையை கொன்று விட்டனர்: தீபா பரபரப்பு பேட்டி

ekuruvi-aiya8-X3

Sasikala-and-Deepak-kill-aunt-together-Deepa-interviewஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடந்த களேபரத்துக்குப்பின் தீபாவை போலீசார் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர்.

அங்கு உள்ளே நடந்த சம்பவம் பற்றி நிருபர்களிடம் கண்ணீர் மல்க விவரித்தார். அப்போது தலைமுடி கலைந்து இருந்தது. அவர் சோர்வாகவும், படபடப்புடனும் காணப்பட்டார். அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தார்.

அவருக்கு அருகில் இருந்த கணவர் மாதவனும் கட்சி நிர்வாகியும் தண்ணீர் வரவழைத்து கொடுத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் தீபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

என் அத்தையின் (ஜெயலலிதா) வீடான போயஸ் கார்டனுக்கு இன்று வரவேண்டும் என்று எந்த எண்ணமும் என்னிடம் கிடையாது. நாளை சில சட்ட நடைமுறைகளை தொடர ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தேன். அதற்குள் என்னை திட்டமிட்டு இங்கு வரவழைத்து விட்டனர்.

என் தம்பி தீபக்தான் என்னை இங்கு வரும்படி கடந்த ஓரிரு நாட்களாக அழைத்துக் கொண்டு இருந்தான். தினமும் என்னுடன் இருக்கும் கட்சி நிர்வாகி ராஜாவிடம் போனில் தொடர்பு கொண்டு எப்போது வருவாய், எப்போது வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இன்று காலையில் நான் போயஸ்கார்டன் வந்தபோது ரோட்டில் போலீஸ் எதுவும் இல்லை. நான் கார்டன் இல்லத்துக்குள் சென்றேன். அங்கு 2, 3 ரவுடிகள், வீட்டு வேலை செய்யும் ராஜம்மாள் ஆகியோர் இருந்தனர்.

என்னை வேண்டும் என்றே திட்டமிட்டு வரவழைத்து தாக்கினார்கள். அப்போது பத்திரிகையாளர்கள் 2 பேர் வீடியோ எடுத்ததை பார்த்து அவர்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதனால் பயந்து போன நான் என்னை மீட்பதற்காக எனது கணவர் மாதவனுக்கு போன் செய்து வரவழைத்தேன்.

என் தம்பி தீபக், சசிகலாவுடன் சேர்ந்துதான் என் அத்தையை கொன்று விட்டார்கள். இந்த வி‌ஷயத்தில் அவனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். ஏற்கனவே கடந்த 4 நாட்களாக போலீஸ் மூலம் பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்தனர். தினகரன் பற்றி ஏன் பேசுகிறாய் என்றார்கள். நான் யாரைப் பற்றியும் பேசுவேன். எனக்கு சுதந்திரம் உள்ளது.

எனது கணவர் மாதவனையும் கொல்லப்பார்க்கிறார்கள். ராஜா மீது பொய் வழக்கு போட நினைக்கிறார்கள். ராஜா யார் என்று என்னிடம் கேட்கிறார்கள். அவன் என்னோடு படித்தவன்.

என்னை எது வேண்டுமானாலும் செய்வார்கள். இன்று ஏமாற்றி வர வழைத்து பிரச்சினை செய்து விட்டார்கள். எனக்கும், என் கணவர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. இந்த சம்பவங்கள் பற்றி பிரதமரிடம் புகார் செய்வேன். அதற்காக அவரை சந்திக்க அனுமதி கேட்பேன்.

திடீர் என்று இவ்வளவு போலீஸ் குவித்ததற்கு என்ன காரணம்? இங்கு ஆட்சி நடக்கவில்லை, இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பிரதமரிடம் முறையிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment